search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பி.எஸ். மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- எழும்பூர் போலீசில் பரபரப்பு புகார்
    X

    ஓ.பி.எஸ். மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- எழும்பூர் போலீசில் பரபரப்பு புகார்

    • தேர்தல் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தான் கட்சிக் கொடியும், சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • கட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    கொடநாடு கொலை-கொள்ளை சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் அ.தி.மு.க. கட்சி கொடியை பயன்படுத்தி உள்ளனர்.

    சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகிலும், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதிலும் அ.தி.மு.க. கட்சி கொடியை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக எழும்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய 2 போலீஸ் நிலையங்களில் அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், வட சென்னை தெற்கு மாவட்டச் செயலாளருமான நா.பாலகங்கா எழும்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க. தான் அங்கீகரிக்கப்பட்ட கழகம் என்று நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கழகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது.

    அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கி வருகிறார். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடத்திய நிகழ்ச்சியில் எங்கள் கழக கொடியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    இவ்வாறு செய்வதின் மூலம் கட்சிகளிடையே பகையும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கோர்ட்டுக்கு எதிரான நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். எனவே நிகழ்ச்சியை நடத்திய ஜே.சி.டி. பிரபாகரன், செந்தமிழன், என்.எம்.பாபு, ராமஜெயம், ராயபுரம் சிவா ஆகியோர் மீதும் இவர்களை தூண்டி விட்ட ஓ.பன்னீர்செல்வம் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பகுதி செயலாளர்கள் சம்பத்குமார், கன்னியப்பன், மாரிமுத்து ஆகியோரும் உடன் இருந்தனர்.

    ஆயிரம் விளக்கு (தெற்கு) பகுதி அ.தி.மு.க. செயலாளரான எம்.பாலச்சந்திரன். நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்று நடத்திய போராட்டத்தில் அ.தி.மு.க. கட்சிக் கொடியை பயன்படுத்தி உள்ளனர்.

    தேர்தல் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தான் கட்சிக் கொடியும், சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    கட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தி வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறி உள்ளார்.

    Next Story
    ×