search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பல்லடம் அருகே தொழில்போட்டியில் பொக்லைன் எந்திரத்தை ஏற்றி பா.ஜ.க., நிர்வாகியை கொல்ல முயற்சி
    X

    பல்லடம் அருகே தொழில்போட்டியில் பொக்லைன் எந்திரத்தை ஏற்றி பா.ஜ.க., நிர்வாகியை கொல்ல முயற்சி

    • பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விடுவதில் 2பேருக்கும் இடையே தொழில் போட்டியும் இருந்து வந்தது.
    • கதிரவன் பொக்லைன் எந்திரத்தை இயக்கிய படி செல்வகுமார் மீது மோதினார்

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், பா.ஜ.க., ஓ. பி .சி. அணி நிர்வாகி.மேலும் பொக்லைன் எந்திரம் சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். பொங்கலூர் எஸ்.ஏ.பி., ரெசிடென்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவரும் பொக்லைன் எந்திரம் வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார்.

    இந்நிலையில் எஸ்ஏபி., ரெசிடென்சி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாக்கடை அமைப்பதில் கதிரவனுக்கும், செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விடுவதில் 2பேருக்கும் இடையே தொழில் போட்டியும் இருந்து வந்தது.

    இந்தநிலையில் நேற்று மாலை செல்வகுமாரின் எதிர்ப்பை மீறி கதிரவனுக்கு சொந்தமான பொக்லைன் எந்திரத்தை கொண்டு சாக்கடை கால்வாயை மண் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் பொக்லைன் வாகனத்தின் குறுக்கே நின்று கொண்டு, அதனை தடுத்து ஆபரேட்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து அங்கு சென்ற கதிரவன் தனது பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுனர் வசந்திடம், எதிரே நின்று கொண்டிருந்த செல்வகுமார் மீது ஏற்றும் படி கூறியதாக தெரிகிறது. வசந்த் மறுத்ததால் அவரை இறக்கி விட்ட கதிரவன் பொக்லைன் எந்திரத்தை இயக்கிய படி செல்வகுமார் மீது மோதினார்.பலமாக மோதியதில் செல்வகுமார் எந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டுவரவே, கதிரவன், வசந்த் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அப்பகுதியினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனிடையே இந்த கொடூர கொலை முயற்சி சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக படம் எடுத்து வாட்ஸ் அப் , பேஸ்புக் என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி பொது மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் கதிரவன், வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.மேலும் பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×