search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்புவதால் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்வு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்புவதால் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்வு

    • ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
    • ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றாலும் முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பள்ளிகள் வருகிற 13-ந்தேதி திறக்கப்படுகின்றன.

    1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு முதலில் வகுப்பு தொடங்குகிறது.

    அதனைத் தொடர்ந்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 20-ந்தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 27-ந்தேதியும் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படுகிறது.

    கோடை விடுமுறையில் வெளியூர் சென்று இருந்த பெற்றோர், குழந்தைகள் பள்ளிகள் திறப்பதால் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வருகிற 13-ந்தேதி வரை முகூர்த்த நாட்கள் இருப்பதால் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன.

    இதனால் வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது. அரசு பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆம்னி பஸ்களிலும் அனைத்து இடங்களும் நிரம்பி வருகின்றன. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கோவை செல்லக்கூடிய ஆம்னி பஸ்களும், அங்கிருந்து சென்னைக்கு வரக்கூடிய பஸ்களிலும் தேவை அதிகரித்து வருவதை அறிந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டனர். அடுத்த வாரம் அனைத்து ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் விலை உச்சத்தை தொட்டு உள்ளது.

    இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை எல்லா ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தேவை அதிகரித்து வருவதை தொடர்ந்து டிக்கெட் கட்டணத்தை இஷ்டத்துக்கு உயர்த்தி உள்ளனர்.

    மதுரையில் இருந்து சென்னை வருவதற்கே ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன படுக்கை கட்டணம் ரூ.1,600 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரையிலும் குளிர்சாதன இருக்கை வசதிக்கு ரூ.1,500 கட்டணமும் பெறப்படுகிறது.

    தூத்துக்குடி-சென்னைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.1,650 முதல் ரூ.2,350 வரையும் ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.1,300-கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர் சாதன வசதி அல்லாத படுக்கைக்கு ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண இருக்கைக்கு ரூ.1000 வரை வசூலிக்கப்படுகிறது.

    12-ந்தேதி பயணத்திற்கு ஏ.சி. படுக்கை வசதி ரூ.2000 முதல் ரூ.3000 வரையும் ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.1,600, ரூ.1,700, ரூ.1,750 வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. அல்லாத படுக்கைக்கு ரூ.1,800 வரையும் இருக்கைக்கு ரூ.1,500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    12-ந்தேதி திருநெல்வேலி-சென்னைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.1,800 முதல் ரூ.2,050 வரையும் ஏ.சி. அல்லாத படுக்கை மற்றும் இருக்கைக்கு ரூ.1,300 முதல் ரூ.1,800 வரை வசூலிக்கிறார்கள்.

    பயணத்திற்கு இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் இக்கட்டணம் அந்தந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றாலும் முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    Next Story
    ×