search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகளிர் உரிமை தொகை பெற பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
    X

    மகளிர் உரிமை தொகை பெற பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    • நகைக்கடன் போல இதுவும் ஒரு ஏமாற்று வேலை என்பதை மகளிர் புரிந்து கொண்டு விட்டார்கள்.
    • அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டு மென்பதே மகளிரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை பெற தி.மு.க. அரசு விதித்து உள்ள நிபந்தனைகளைப் பார்க்கும்போது, பெரும்பாலானோர் இந்தத் திட்டத்தின்கீழ் பயன் பெற முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், ஓய்வூதியதாரர்கள், தொழில் வரி செலுத்துவோர், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் பயன்பெறுவோர் என கணக்கெடுத்தாலே 2 கோடி குடும்பங்களைத்தொடும் நிலையில், பயனாளிகள் யார் என்பதே புரியாத புதிராக உள்ளது. மகளிர் உரிமைத் தொகையை யாருமே பெறக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

    ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவை இல்லை என்றாலும், அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த விதியின்மூலம், சில லட்சம் தி.மு.க.வினருக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகையை அளித்துவிட்டு, இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது என்று மார்தட்டிக் கொள்ள தி.மு.க. அரசு முயலுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

    இந்தத் திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட ஒரு கோடி மகளிர் பயன் பெறுவர் என முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பார்த்தால், ஒரு சில லட்சம் மகளிர்கூட இத்திட்டத் தின்கீழ் பயன் பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நகைக்கடன் போல இதுவும் ஒரு ஏமாற்று வேலை என்பதை மகளிர் புரிந்து கொண்டு விட்டார்கள்.

    இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகை என்று அறிவித்ததற்கு ஏற்ப, அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டு மென்பதே மகளிரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×