என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீட் தேர்ச்சி விகிதம் குறைந்ததால் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் கட்-ஆப் மார்க் 15 குறைந்தது
- இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட குறைந்தது.
- தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளும் அதிகளவில் மதிப்பெண்களை குவிக்க இயலவில்லை.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டன.
தரவரிசை பட்டியலில் மதுரை கே.கே.நகர் மாணவர் திரிதேவ் விநாயகா முதலிடம் பிடித்தார். அவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 705 மார்க் எடுத்து அகில இந்திய அளவில் 30-வது இடத்தையும் தமிழகத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
கோவை மாணவி ஹரிணி 702 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும், சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மாணவர் சொக்கலிங்கம் 700 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட குறைந்தது. தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளும் அதிகளவில் மதிப்பெண்களை குவிக்க இயலவில்லை.
இதன்காரணமாக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கட் மார்க் 15 மார்க் வரை குறைந்துள்ளது. எல்லோருக்குமான பொதுவான தரவரிசை பட்டியலில் 5 கட் ஆப் மார்க்கும், மற்ற பிரிவினருக்கு 15 மார்க்கும் இந்த ஆண்டு குறைந்துள்ளது.
2021-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2022-ல் டாப் மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தது.
நீட் தேர்வில் 720க்கு 700 மதிப்பெண் 5 பேர் மட்டுமே இந்த ஆண்டு பெற்றனர். இது கடந்த ஆண்டில் 9 ஆக இருந்தது. 650 மதிப்பெண்ணுக்கு மேல் 198 மாணவர்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இது 239 ஆக இருந்தது.
இதேபோல 600 மதிப்பெண்ணுக்கு மேல் 953 பேர் பெற்றனர். கடந்த வருடம் இது 1030 பேர் இந்த மதிப்பெண்களை எடுத்து இருந்தனர். 500க்கு மேல் மதிப்பெண் குவித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் இந்த ஆண்டு குறைந்தது. 8763 பேர் இந்த மதிப்பெண்களை பெற்ற நிலையில் கடந்த ஆண்டு இது 10,973 ஆக உயர்ந்து இருந்தது.
அதே நேரத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கட்-ஆப் மார்க் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த வருடம் கட்-ஆப் மார்க் கூடியுள்ளது.
பவானி அரசு பள்ளி மாணவி தேவதர்ஷினி 518 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். 250 மாணவர்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் இந்த ஆண்டு பெற்றுள்ளனர். கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 184 ஆக இருந்தது.
குரோம்பேட்டை அரசு பள்ளி மாணவர் சவுந்தர் ராஜன் 503 மதிப்பெண் பெற்று 2-வது இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு பொது பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ். கட்-ஆப் மார்க் 338 ஆகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 263, பிற்படுத்தப்பட்ட (முஸ்லீம்) 219, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 271, எஸ்.சி. பிரிவுக்கு 220, எஸ்.சி. (அருந்ததி) 225, எஸ்.டி.க்கு 249 கட்-ஆப் ஆக இருந்தது.






