என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்-  உதயநிதி ஸ்டாலின்
    X

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

    • தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினேன்.
    • இந்திய கூட்டணியால் மட்டுமே இந்தியாவை மாற்ற முடியும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சரளையில் இன்று காலை தி.மு.க. மூத்த உறுப்பினர்கள் 2,500 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஈரோடுக்கு பலமுறை வந்திருக்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டேன். தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினேன்.

    இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை 65,000 வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் (மக்கள்) வெற்றி பெற செய்தீர்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்திற்கு சென்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு வரும்போது பெரியார் பாசறைக்கு செல்வது போன்று உணர்வு ஏற்படுகிறது. கழகத்தை நான்கு மண்டலமாக பிரித்துள்ளோம்.

    திருவள்ளுவர், அண்ணா, பெரியார், கலைஞர் எனப் பிரித்துள்ளோம். மதுரையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு மாநாடு நடந்தது. அது என்ன மாநாடு தெரியுமா. புளி சோறு மாநாடு. ஒரு மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த மாநாடு இருந்தது. ஆனால் ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்ற எடுத்துக்காட்டாக சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு அமையும். திமுக எவ்வளவோ தேர்தல் அறிக்கைகளை கூறி நிறைவேற்றி உள்ளது.

    அதில் முக்கியமான நான்கு மட்டும் உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். 1) மகளிர் இலவச பேருந்து பயணம். 2) அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி சொல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம். 3) காலை உணவு திட்டம் 4) மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞரின் உரிமை தொகை திட்டம்.

    இதில் இரண்டு, மூன்று திட்டமானது தேர்தல் அறிக்கையில் கூறாத திட்டம். கலைஞர் தமிழகத்தில் 5 முறை ஆண்டதும், அதே நேரத்தில் தற்போது தலைவர் மு. க. ஸ்டாலின் ஆண்டு வருவதற்கும் கழகத்தின் மூத்த முன்னோடிகள் தான் காரணம். நான் தந்தை பெரியார், அண்ணா ஆகிய இருவரையும் நேரில் பார்த்ததில்லை. அவர்களின் மறு உருவமாக உங்களை (மூத்த உறுப்பினர்கள்) பார்க்கிறேன். 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எப்படி அதிமுகவை வீட்டுக்கு அனுப்பினார்களோ அதைப்போல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்திய கூட்டணியால் மட்டுமே இந்தியாவை மாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×