search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை புறநகர் பகுதிகளில் தீராத சோகம்: 200 இடங்களில் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பு
    X

    சென்னை புறநகர் பகுதிகளில் தீராத சோகம்: 200 இடங்களில் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பு

    • நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 42 ஆயிரம் பேரில் சுமார் 30 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர்.
    • சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பினாலும் இன்னும் ஒருசில பகுதிகளில் மழை நீர் வடியாமல்தான் உள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கி மக்கள் கடும் தவிப்புக்கு உள்ளானார்கள்.

    சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற முடியாதபடி மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். கடந்த 4 நாட்களாக மீட்பு பணிகள் நடந்தன. 420 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அங்கு சுமார் 42 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர்.

    புயல் மழை பாதித்த பிறகு கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் மிகப்பெரிய முடக்கம் ஏற்பட்டது. மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பால்-குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    நேற்று முன்தினம் முதல் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. நேற்று 95 சதவீத இடங்களில் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. மாநகர பஸ்கள் மற்றும் மின்சார ரெயில்கள் முழு அளவில் இயக்கப்பட்டதால் நேற்று பெரும்பாலான மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் நிலைக்கு வந்தனர்.

    நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 42 ஆயிரம் பேரில் சுமார் 30 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். மருத்துவ குழுக்கள் மூலம் அவர்களுக்கு உதவி செய்யப்படுகின்றன.

    நேற்று முன்தினம் வரை 800 இடங்களில் தண்ணீர் வடியாமல் இருந்தது. நேற்று 343 பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் நேற்று இரவு 50 பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டு விட்டது. இன்று காலை மற்ற இடங்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    ஆனால் அந்த இடங்களில் தண்ணீர் அகற்றுவதில் கடும் சவாலும், சிக்கலும் நீடிக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி சுமார் 200 இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. அங்கு இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவதில் மீட்பு படையினரும், நிவாரண குழுவினரும் கடும் போராட்டத்தை சந்தித்து உள்ளனர். இன்று அல்லது நாளைக்குள் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    குறிப்பாக பெரம்பூர், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை, தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, டான்சி நகர், பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், ஓட்டேரி, திருவொற்றியூர், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம், முடிச்சூர், சமத்துவ பெரியார் நகர், வரதராஜபுரம், மண்ணிவாக்கம், பரத்வாஜ் நகர், கிருஷ்ணா நகர், மணிமங்கலம், லட்சுமி நகர், எர்ணாவூர், எண்ணூர், மணலி, வடபெரும்பாக்கம், கண்ணம்பாளையம், மஞ்சம்பாக்கம், புழல், வடகரை, முகலிவாக்கம், திருவேற்காடு, கெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் இன்றும் 5-வது நாளாக தண்ணீர் தேக்கம் காணப்படுகிறது.

    இந்த பகுதிகளில் ராட்சத எந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி 24 மணி நேரமும் நடந்து வருகிறது. இங்கு மழை நீர் வடியாமல் குளம் போல் தேங்கி கிடப்பதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தண்ணீரில் நடந்து சென்றுதான் வாங்கி வருகின்றனர். இங்கு மழை நீரை வடிய வைக்க மாநகராட்சி அதிகாரிகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

    மழை நின்று 5 நாட்கள் ஆகியும் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளது குறித்து மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பினாலும் இன்னும் ஒருசில பகுதிகளில் மழை நீர் வடியாமல்தான் உள்ளது.

    குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை நீரை வடிய வைப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. கூவம், அடையாறு பகுதிகளில் மழைநீர் அதிகமாக வருவதாலும், உள்புற பகுதிகளில் உள்ள கால்வாய்களில் இன்னும் தண்ணீர் அதிகம் செல்வதாலும் மழை நீர் மெதுவாகத்தான் வடிந்து வருகிறது.

    இதன் காரணமாக மணலி சடையாங்குப்பம், பாலகிருஷ்ணாபுரம், கொடுங்கையூர், வியாசர்பாடி, ராயபுரம் எம்.சி. ரோடு, புளியந்தோப்பின் பல பகுதிகள், பெரம்பூர் ஜமாலியா, சூளை கண்ணையா தெரு, பட்டாளம் அங்காளம்மன் கோவில் தெரு, மாதவரத்தில் தணிகாசலம் பகுதி, வேளச்சேரி, மடிப்பாக்கம் ராம்நகர், குபேரன் நகர், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இந்த பகுதிகளில் மாநகராட்சி தனி கவனம் செலுத்தி 240-க்கும் மேற்பட்ட மோட்டார்களை மாற்றி அமைத்து தண்ணீரை வடிய வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இப்பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து விடுவதால் ஆங்காங்கே பிளீச்சிங் பவுடர் தெளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    தண்ணீர் வடியும் பகுதிகளில் தேங்கிய குப்பைகளை போர்க்கால அடிப்படையில் அகற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் மட்டும் 360 இடங்களில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் துப்புரவு பணியில் மாநகராட்சியில் உள்ள 23 ஆயிரம் துப்புரவு பணியாளர்களுடன் வெளி மாவட்டங்களில் இருந்து 2,360 பேர் துப்புரவு பணிக்காக வந்துள்ளனர். அவர்களும் கடினமாக பணியாற்றி வருகிறார்கள்.

    சென்னை நகருக்குள் சில பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை வெளியேற்றுவது பெரும் சவாலாக உள்ளது. இதற்காக அந்தந்த பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் களப் பணியாற்றி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை நகரில் மழை நீர் வடியாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர்.

    மழை நீரில் சாக்கடை கலந்து விட்டதால் பொதுமக்கள் அதில் நடக்கவே அருவறுப்படைந்து வருகின்றனர். வேறு வழியின்றி அதில் நடந்து சென்றுதான் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    புளியந்தோப்பு அங்காளம்மன் கோவில் தெருவிலும் இன்று 6-வது நாளாக தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெரு, நாச்சியார் அம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் வடியாமல் உள்ளதால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். புளியந்தோப்பு நாராயணசாமி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்திருப்பதால் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×