search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் கரையை கடக்கிறது மாண்டஸ் புயல்- 75 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும்
    X

    மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் கரையை கடக்கிறது மாண்டஸ் புயல்- 75 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும்

    • மாண்டஸ் புயல் வலுவிழுந்து கரையை கடப்பதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
    • வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் அதி கனமழை பெய்யும்.

    சென்னை:

    வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலை கொண்டிருந்தது.

    பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு "மாண்டஸ்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர புயல் இன்று காலையில் புயலாக வலுவிழுந்து கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது.

    அதன்படி தீவிர புயலாக இருந்த மாண்டஸ் இன்று காலையில் புயலாக வலுவிழுந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    புயல் கரையை கடக்கும் போது 65 கி.மீ. வேகத்தில் இருந்து 75 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

    இன்று காலை நிலவரப்படி மாண்டஸ் புயல் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும் இலங்கை திரிகோணமலைக்கு வடக்கு-வடகிழக்கே 240 கி.மீ. தூரத்திலும், காரைக்காலுக்கு கிழக்கு-தென் கிழக்கே 240 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்றும் அதே நேரத்தில் கடல் சீற்றம், கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாண்டஸ் புயல் வலுவிழுந்து கரையை கடப்பதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் அதி கனமழை பெய்யும்.

    நாளை (10-ந்தேதி) வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று காலை நிலவரப்படி மாண்டஸ் புயல் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தீவிர புயலாக இருந்து தற்போது வலுவிழக்கிறது. அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக் கூடும்.

    தற்போது 13 கி.மீ. வேகத்தில் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு முதல் அதிகாலை வரைக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும்- புதுச்சேரிக்கும் இடையே மாமல்லபுரத்தையொட்டி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மிக கனமழையும் பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடக்க இருப்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதி நாளை காலை வரையில் கொந்தளிப்புடன் காணப்படும். அதே போல மேற்கு மத்திய வங்க கடல் பகுதியிலும் கடல் சீற்றத்துடன் உள்ளது.

    தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, இலங்கை கடல் பகுதியில் கடல் சீற்றம் நாளை வரை அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் புயல் கரையை கடக்கும் போது வட தமிழக கடலோரப் பகுதி மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் கடல் அலை 2 அடி உயர வாய்ப்பு உள்ளது.

    மேலும் தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதே போல் இன்று மாலை முதல் நாளை காலை வரை மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்திலும் இடையிடையே 85 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். அதன் பின்னர் காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×