என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தேசிய அளவில் மம்தாவின் கூட்டணி கணக்குக்கு மு.க.ஸ்டாலின் விடை சொல்வாரா?- சென்னையில் நாளை சந்திப்பு
    X

    தேசிய அளவில் மம்தாவின் கூட்டணி கணக்குக்கு மு.க.ஸ்டாலின் விடை சொல்வாரா?- சென்னையில் நாளை சந்திப்பு

    • கவர்னர் இல.கணேசனின் மூத்த சகோதரர் 80-வது பிறந் நாள் விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்கிறார்.
    • தனது சென்னை பயணத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

    சென்னை:

    தேர்தல் நெருங்கும் நேரங்களில் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட தொடங்கும். அந்த வகையில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே ஒவ்வொரு கட்சியும் காய்களை நகர்த்த தொடங்கிவிட்டன.

    மத்தியில் வலுவான நிலையில் இருக்கும் பா.ஜனதாவை வீழ்த்த பலமான கூட்டணியை அமைத்தால் மட்டுமே முடியும் என்பதையும் பா.ஜனதாவுக்கு எதிரான எல்லா கட்சிகளும் உணர்ந்துள்ளன.

    எனவே கூட்டணிக்கான வியூகங்களை வகுப்பதில் எல்லா கட்சிகளும் ஒன்றோடு ஒன்று பேசி வருகின்றன. காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஒரு முயற்சி எடுத்தார்.

    இதற்காக பல தலைவர்களை நேரிலும் சந்தித்தார். சென்னை வந்து முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதே நேரம் ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தி.மு.க. நட்பு பாராட்டி வருகிறது.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை முன்னிலைப்படுத்தி ஒரு கூட்டணியை உருவாக்கவும் முயற்சிகள் நடக்கிறது. அதேநேரம் அகில இந்திய அளவில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் உள்ளார்.

    அவரும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்குவதில் முனைப்பு காட்டினார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டது. அமைச்சர்களின் வீடுகளில் நடந்த சோதனைகளுக்கு பிறகு மத்திய அரசுடனான மோதல் போக்கிலும் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் முந்தைய கவர்னருடன் மோதல் போக்கை கடைபிடித்த மம்தா தற்போதைய பொறுப்பு கவர்னரான இல.கணேசனுடன் நட்பு பாராட்டி வருகிறார்.

    இந்த நிலையில் கவர்னர் இல.கணேசனின் மூத்த சகோதரர் 80-வது பிறந் நாள் விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்கிறார்.

    தனது சென்னை பயணத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது தேசிய அளவிலான அரசியல், கூட்டணி பற்றியும் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த தேர்தலின்போது ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று முதலில் முன்மொழிந்தது மு.க.ஸ்டாலின் தான்.

    எனவே இந்த தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு பற்றி இரு தலைவர்களும் விவாதிக்கிறார்கள். மம்தாவும் தனது கூட்டணி கணக்கு பற்றி மு.க.ஸ்டாலினுடன் விவாதிக்கிறார். அதற்கு மு.க.ஸ்டாலின் சொல்லும் விடையை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணி சேருவது, பிரதமர் வேட்பாளர் என்பதில் ஒவ்வொரு கட்சிக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதால் முதலில் கூட்டணி அமைத்து வெற்றி காண்பது, அதன் பிறகு பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து கொள்ளலாம் என்ற முடிவுடன் மம்தா பேசுவார் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×