search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பலியான 9 பேரின் அடையாளம் காணப்பட்டது- சென்னையில் இருந்து 2 விமானங்களில் சொந்த ஊருக்கு உடல்கள் அனுப்பி வைப்பு
    X

    பலியான 9 பேரின் அடையாளம் காணப்பட்டது- சென்னையில் இருந்து 2 விமானங்களில் சொந்த ஊருக்கு உடல்கள் அனுப்பி வைப்பு

    • 63 பேர் பயணித்த அந்த ரெயில் பெட்டியில் சமையல் செய்தவற்காக 5 பேர் வந்துள்ளனர்.
    • ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் தீயில் கருகி பலியாகி உடல்களாக கொண்டு வரப்பட்டது

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று ராமேசுவரம் செல்வதற்காக 63 பயணிகள் ரெயிலில் வந்தனர். இந்த ரெயில் பெட்டியில் நேற்று அதிகாலை டீ தயாரிப்பதற்காக சிலிண்டரை பற்ற வைத்தபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் 9 பேர் உடல் கருகி பலியானார்கள். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தில் ஒருவரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு காணப்பட்டது. கடைசியில் அவர் பெண் என்பது உறுதியானது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரெயிலில் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிகள் இருந்தும் அதனை மீறி யாத்ரீகர்கள் கொண்டு வந்த சிலிண்டர் அவர்கள் உயிரை பறித்துள்ளது.

    63 பேர் பயணித்த அந்த ரெயில் பெட்டியில் சமையல் செய்தவற்காக 5 பேர் வந்துள்ளனர். அவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவுகளை தயாரித்து கொடுத்துள்ளனர். அதேபோல் கியாஸ் அடுப்பை பயன்படுத்தாமல், சிலிண்டரிலேயே வைத்து சமையல் செய்துள்ளனர். அப்போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது.

    தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைத்த பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, ஆங்காங்கே உடல்கள் கருகிய நிலையில் கிடந்தன. ஒரு சிலர் தாங்கள் படுத்திருந்த பெர்த் படுக்கையிலேயே பிணமாக கரிக்கட்டையாக கிடந்தனர்.

    அப்பர் பெர்த், லோயர் பெர்த்தில் படுத்திருந்தவர்களின் பெயர்களை வைத்தே அடையாளம் காணப்பட்டது. லேசான காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அவர்கள் மூலம் இறந்தவர்களை அடையாளம் கண்டனர்.

    அதன்படி பலியானவர்களின் விபரம் வருமாறு:-

    1.ஹரிஷ்குமார் யாசின் (வயது 62), பிரேம் நகர், சிட்டாப்பூர்.

    2.தீபக் கஸ்யாப் (21), நயபாஷி, கவுசல்யா பவன், சிட்டாப்பூர்.

    3.அன்குல் (36), சாய்பாபா ரோடு, சிட்டாப்பூர்.

    4.சத்ரு தமன் சிங் (65), மவுலா அதஸ் நகர், சிட்டாப்பூர்.

    5.பரமேஸ்வர் தயாள் சர்மா (57), மீடா டாக்கீஸ் கிராமம், ஹர்தோஸ் மாவட்டம்.

    6.மித்திலேஸ் (62), ஆதர்ஸ் நகர், செக்டார்-1, நைபாலபூர், லக்கிம்பூர் ரோடு, சிட்டாப்பூர்.

    7.சாந்திதேவி வர்மா (70), கோட்டியா, லக்கிம்பூர்.

    8.குமார் ஹிமானி பன்சால் (27), அக்ரசன் கண்டன் கல்லூரி அருகில், சவுக், லக்னோ.

    9.மனோரமா அகல்வால் (81), அக்ரசன் ஆண்டன் கல்லூரி அருகில், சவுக், லக்னோ.

    இவர்கள் 9 பேரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. பின்னர் அவர்களது உடல்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து 3 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் பலியானோரின் உடல்கள் சென்னை விமான நிலையம் கொண்டு செல்லட்டது. அங்கிருந்து 2 தனி விமானங்களில் உடல்கள் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ கொண்டு செல்லப்பட்டது.

    ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் தீயில் கருகி பலியாகி உடல்களாக கொண்டு வரப்பட்டது அவர்களின் உறவினர்களிடையேயும், அவர்கள் வசித்த பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×