search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிருஷ்ணகிரி பறக்கும்படை தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி, கண்காணித்து ரேசன் அரிசி கடத்தியவர் கைது
    X

    கிருஷ்ணகிரி பறக்கும்படை தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி, கண்காணித்து ரேசன் அரிசி கடத்தியவர் கைது

    • தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.
    • ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்திய நபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை தாசில்தாராக பணியாற்றி வருபவர் இளங்கோ.

    இவர் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து வருகிறார்கள். மேலும் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த தாசில்தார் இளங்கோ பயன்படுத்தி வரும் அரசு ஜீப்பில் டிரைவராக கிருஷ்ணகிரியை அடுத்த பி.சி.புதூரை சேர்ந்த சுப்பிரமணி (59) என்பவர் பணியாற்றி வந்தார்.

    ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, கலெக்டரின் டிரைவராக பணியாற்றினார். அதன் பிறகு இவர் பணி மாறுதலில் பறக்கும் படை தாசில்தார் இளங்கோவின் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இதை கவனித்த அவர், இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பந்தப்பட்ட தாசில்தாரின் டிரைவர் சுப்பிரமணியை பணிமாறுதல் செய்து கிருஷ்ணகிரி தாசில்தார் ஜீப்பின் டிரைவராக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஜி.பி.எஸ். கருவியை ரேஷன்அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த குருபரப்பள்ளி அருகே உள்ள நடுசாலையை சேர்ந்த தேவராஜ் (33) என்பவர் பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கருவி தேவராஜின் செல்போன் எண்ணுடன் இணைப்பில் இருந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து தேவராஜை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் தான் ரேஷன் அரிசி கடத்தலுக்காக ஜி.பி.எஸ். கருவியை பறக்கும் படை தாசில்தாரின் ஜீப் டிரைவராக இருந்த சுப்பிரமணியிடம் வழங்கியதாகவும், அதை அவர் தான் ஜீப்பில் பொருத்தி எனக்கு உதவி செய்தார் என்றும் கூறினார்.

    இதையடுத்து ஜீப் டிரைவர் சுப்பிரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அரிசி கடத்தல் மன்னன் தேவராஜ் கூறியவை உண்மை என தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவி வாங்கி தாசில்தாரின் ஜீப்பில் பொருத்தி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த தேவராஜ், உடந்தையாக இருந்த தாசில்தாரின் ஜீப் டிரைவர் சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வகிறார்கள்.

    கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க செல்லும் பறக்கும் படை தாசில்தாரின் ஜீப்பிலேயே ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி, வாகனத்தை கண்காணித்து, ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்திய நபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×