search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புயல் சின்னம் மேலும் வலுவடைகிறது: நெல்லை, குமரிக்கு நாளை கனமழை எச்சரிக்கை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    புயல் சின்னம் மேலும் வலுவடைகிறது: நெல்லை, குமரிக்கு நாளை கனமழை எச்சரிக்கை

    • டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.
    • வங்க கடலில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல் சின்னம் நாளை ஆந்திர கடலோர பகுதிகளில் நிலை கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்க கடலில் தென் கிழக்கு பகுதியில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது.

    இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் மிக பலத்த மழை பெய்தது.

    இன்று (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணி அளவில் அந்த குறைந்த காற்றழுத்தம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை இலாக்கா அறிவித்து இருந்தது. அது புயல் சின்னமாக மாறுவதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று சற்று தாமதமாக மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 6 மணி நேர தாமதத்திற்கு பிறகு அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக்கா அதிகாரிகள் அறிவித்தனர்.

    வங்க கடலில் மேற்கு வட மேற்கு திசை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்வதால் இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.

    புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் பரவலாக இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று இரவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை வானிலை இலாக்கா அதிகாரிகள் கூறுகையில், "மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் பகுதி ஆகியவற்றில் மிக பலத்த மழை பெய்யும்" என்று கூறி இருந்தனர். அதன்படி தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் இன்று கணிசமான மழை பெய்தது.

    நாளை (வியாழக்கிழமை) நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக்கா கூறி உள்ளது. இதற்கிடையே வங்க கடலில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல் சின்னம் நாளை ஆந்திர கடலோர பகுதிகளில் நிலை கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பிறகு நாளை மறுநாள் (17-ந்தேதி) அது ஒடிசா கடற்கரையில் நிலை கொள்ளும் என்று வானிலை இலாக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு மேலும் அது வடக்கு திசை நோக்கி திரும்பும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    புயல் சின்னம் வடக்கு வடமேற்கு திசைகளுக்கு திரும்பினாலும் காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை வரை மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×