search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் விடுமுறை எதிரொலி: பஸ், ரெயில் நிலையங்களில் இன்று 2-வது நாளாக அலைமோதிய கூட்டம்
    X

    தொடர் விடுமுறை எதிரொலி: பஸ், ரெயில் நிலையங்களில் இன்று 2-வது நாளாக அலைமோதிய கூட்டம்

    • பயணிகள் வசதிக்காக சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல தென்னக ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை இயக்கியது.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இன்றும், நாளையும் வழக்கமான வார விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

    இதனால் ஆயுத பூஜையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வதற்கு பஸ், ரெயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தனர்.

    பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சுமார் 2,100 பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் முன்பதிவு அதிகரித்ததால் கூடுதலாக 2,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதுபோல மற்ற ஊர்களில் இருந்து 1,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பஸ்களில் பயணம் செய்வதற்காக நேற்று மக்கள் பஸ் நிலையங்களுக்கு படை எடுத்தனர். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று மதியத்தில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மாலை 6 மணிக்கு பிறகு பயணிகள் அலை அலையாக வரத் தொடங்கினார்கள். இதனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது.

    பயணிகள் வசதிக்காக சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த 3 பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கோயம்பேட்டில் திரண்ட மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாத அளவுக்கு திணறல் ஏற்பட்டது.

    முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களது பஸ் எங்கு நிற்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள். நள்ளிரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்கு வசதியாக மெட்ரோ ரெயில்களும் கூடுதலாக விடப்பட்டு இருந்தது.

    பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல தென்னக ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை இயக்கியது. வடமாநிலங்களுக்கு அதிகளவு சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தொடர் விடுமுறை காரணமாக சொந்த வாகனங்களில் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு செல்பவர்களின் எண்ணிக்கையும் நேற்று அதிகமாக இருந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து கடும் நெரிசலுடன் காணப்பட்டது.

    நேற்று மட்டும் ரெயில்கள் மூலம் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்றனர். ஆம்னி பஸ்களிலும் சுமார் 1.5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    சொந்த வாகனங்கள் மூலமாக சென்றவர்கள் எண்ணிக்கையும் 1 லட்சம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மட்டும் 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாதவர்கள் இன்று காலை முதல் பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

    இதனால் இன்றும் சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.

    Next Story
    ×