என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பண்ருட்டியில் அரசு டெப்போவில் 4 பஸ்கள் தீப்பிடித்து எரிந்தது
    X

    பண்ருட்டியில் அரசு டெப்போவில் 4 பஸ்கள் தீப்பிடித்து எரிந்தது

    • டெப்போவில் ஏலம் விடப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட பழைய பஸ்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
    • பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் தீப்பிடித்தற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கும்பகோணம் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ இயங்கி வருகிறது.

    கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் இந்த டெப்போவில் இருந்துதான் தினமும் சென்று வருவது வழக்கம்.

    இந்த டெப்போவில் ஏலம் விடப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட பழைய பஸ்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தற்போது இந்த பழைய பஸ்களில் இருந்து உபயோகமான பொருட்களை வெல்டிங் வேலை ஆட்கள் மூலம் பிரித்து எடுத்து வந்தனர். நேற்று இந்த வெல்டிங் வேலை நடந்தது. பின்னர் மாலையில் வேலை முடிந்து வெல்டிங் வேலை ஆட்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டு வெல்டிங் வேலை பார்க்கப்பட்ட பழைய பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவி அந்த பஸ் முழுவதும் எரிந்தது சேதமானது. மேலும் இந்த தீ அருகில் இருந்த 3 பஸ்களுக்கும் பரவி அந்த பஸ்களின் முன்பகுதி சேதமானது. இதனால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இதை பார்த்த டெப்போவில் இருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து டெப்போ அதிகாரிகளுக்கும், பண்ருட்டி தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை அதிகாரி வேல்முருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருகில் இருந்த மற்ற பஸ்களுக்கு தீ பரவாமல் போராடி தீயை அணைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் தீப்பிடித்தற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெப்போவில் இருந்த பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×