search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தினமும் ரூ.15 கோடி நஷ்டத்தை சந்திக்கும் அரசு போக்குவரத்து கழகங்கள்
    X

    தினமும் ரூ.15 கோடி நஷ்டத்தை சந்திக்கும் அரசு போக்குவரத்து கழகங்கள்

    • மகளிர், பள்ளி மாணவர்கள் இலவச பயணத்திற்கு அரசு கணக்கிட்டு டிக்கெட் கட்டணத்தை போக்குவரத்து கழகங்களுக்கு கொடுத்து வருகிறது.
    • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவினருக்கு பஸ்களில் இலவசமாக செல்ல அரசு சலுகை வழங்கியுள்ளது.

    சென்னை :

    தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. நகர் பகுதி முதல் கிராமங்கள் வரை மட்டுமின்றி மலைப்பகுதியிலும் அரசு பஸ்கள் செல்வதால் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமாக 19 ஆயிரம் பஸ்கள் உள்ளன. சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள்.

    அரசின் நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வந்த அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஆண்டுக்கு ஆண்டு தேய்ந்து தற்போது மிகவும் மோசமான சூழலில் தள்ளாடி கொண்டிருக்கிறது.

    அரசு பஸ்களில் தினமும் ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். 35 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் கட்டணமின்றி பயணிக்கிறார்கள்.

    பெண்களுக்கு நகர பஸ்களில் இலவச பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 55 லட்சம் பெண்கள் சராசரியாக தினமும் பயணிக்கிறார்கள். இதுதவிர 40 லட்சம் பொது க்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    மகளிர், பள்ளி மாணவர்கள் இலவச பயணத்திற்கு அரசு கணக்கிட்டு டிக்கெட் கட்டணத்தை போக்குவரத்து கழகங்களுக்கு கொடுத்து வருகிறது.

    மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவினருக்கு பஸ்களில் இலவசமாக செல்ல அரசு சலுகை வழங்கியுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனால் போக்குவரத்து கழகங்களின் வருவாய் இழப்பு சற்று குறைந்தது. ஆனாலும் தொடர்ந்து அதிகரித்து வந்த டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், மூலப்பொருட்கள் விலை உயர்வால் மீண்டும் பழையபடி கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

    அரசு பஸ்களில் தினமும் பொதுமக்கள் பயணம் செய்வதன் மூலம் ரூ.25 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் பஸ்களை இயக்குவதற்கான டீசல் செலவு, சம்பளம், படி உள்ளிட்ட அனைத்தையும் கணக்கிட்டால் தினமும் ரூ.15 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பொதுமக்கள் நலன் சார்ந்த சேவையாக போக்குவரத்து இருப்பதால் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. டீசல் கொள்முதல், சுங்கச்சாவடி கட்டணம், ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை, ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு, அகவிலைப்படி என பல்வேறு செலவினங்கள் அதிகரித்து செல்வதால் வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது என்று துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் 7, 8 ஆண்டுகள் பயன்படுத்திய பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. புதிய பஸ்கள் வாங்க அரசுதான் நிதியுதவி அளித்து வருகிறது.

    மோசமான நிலையில் உள்ள பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் வாங்குவதற்கு போக்குவரத்து கழகங்களிடம் எவ்வித நிதி ஆதாரங்களும் இல்லை.

    சுங்கச்சாவடி கட்டணமாக மட்டும் மாதத்திற்கு அரசு போக்குவரத்து கழகங்கள் ரூ.30 கோடி செலுத்துவதாக கூறப்படுகிறது. வருவாயில் ஒரு பகுதி சுங்கச்சாவடிக்கு போய் விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 13 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஒரு சுங்கச்சாவடிக்கு ரூ.450 வசூலிக்கப்படுகிறது. ஒரு பஸ்சிற்கு சுங்க கட்டணமாக ரூ.5000 வரை செலுத்த வேண்டியுள்ளது.

    அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளித்தால் ஓரளவிற்கு நஷ்டத்தை குறைக்கலாம். தனியார் பஸ்களை போல அரசு பஸ்களை இயக்க முடியாது.

    லாப நஷ்டத்தை பார்க்காமல் மக்கள் சேவையாக கருதியே ஒவ்வொரு வழித்தடங்களிலும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்குவதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு லாபம் கிடைப்பது இல்லை. நஷ்டம் தான் ஏற்படுகிறது. மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கூடுதல் பஸ்கள் பல்வேறு நகரங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் டீசல் செலவு அதிகரிக்கிறது.

    அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு வழங்கி ஈடு செய்தால் மட்டுமே புதுப்பொலிவு பெறும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிதி நெருக்கடி, செலவினம் அதிகரிப்பால் போக்குவரத்துக் கழகங்கள் தடுமாறுகின்றன. இதுபற்றி போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது,

    மக்கள் நலனுக்காக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதனால் நஷ்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாது. ஆனால் தொடர்ந்து நஷ்டம் அதிகரித்து வருவதால் பல்வேறு சிரமங்களை நாங்கள் சந்திக்கிறோம்.

    ஓய்வூதிய பலன்கள், ஊதிய உயர்வு ஒரு பக்கம் செலவினத்தை அதிகரித்து வரும் நிலையில் டீசல் விலை கடும் இழப்பை ஏற்படுத்துகிறது.

    பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வழியில்லை. ஆனால் அது அரசின் கொள்கை முடிவு. போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி சுமையில் இருந்து அரசுதான் உதவ வேண்டும்.

    புதிய பஸ்கள் வந்தால் தான் மக்கள் அதிகளவில் பயணிப்பார்கள். அதிகரித்து வரும் வருவாய் இழப்பை குறைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் போக்குவரத்துக் கழகங்கள் புத்துணர்ச்சி பெறும் என்றனர்.

    Next Story
    ×