search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பறக்கும் ரெயில் கட்டணம் உயர்கிறது
    X

    பறக்கும் ரெயில் கட்டணம் உயர்கிறது

    • சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை இயங்கி வருகிறது.
    • கடந்த ஆண்டு மட்டும் ரூ.84.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை இயங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் 150 பறக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது வேளச்சேரியையும், பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரெயில் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 19 ரெயில் நிலையங்கள் உள்ளன. பறக்கும் ரெயிலில் பயணம் செய்ய குறைந்த அளவிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரெயிலில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் மட்டுமே ஆகும்.

    இந்த நிலையில் பறக்கும் ரெயில் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.84.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே பறக்கும் ரெயில் சேவைக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு மேல் செலவிடுகிறது. இந்த பணம் ரெயில் இயக்கம், பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்காக செலவிடப்படுகிறது. பறக்கும் ரெயில் டிக்கெட் விற்பனை மூலம் தெற்கு ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.17.25 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் பறக்கும் ரெயில் சேவையை தெற்கு ரெயில்வேயிடம் இருந்து கையகப்படுத்த தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. எனவே விரைவில் பறக்கும் ரெயில் சேவைகள் அனைத்தும் தமிழக அரசுக்கு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது இழப்பு ஏற்பட்டு வருவதால் ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பறக்கும் ரெயில் கட்டணம் உயருகிறது. குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட உள்ளது. மெட்ரோ ரெயில் சேவையை கையகப்படுத்தியப் பிறகு பறக்கும் ரெயில் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். பறக்கும் ரெயிலை தமிழக அரசு ஒரே நேரத்தில் கையகப்படுத்தினால் 150 ரெயில் பெட்டிகளை வாங்கும். அதன் விலை மட்டும் சுமார் ரூ.140 கோடி ஆகும்.

    மேலும் கையகப்படுத்த நடவடிக்கை அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பறக்கும் ரெயில் சேவையை கையகப்படுத்த ரூ.500 கோடிக்கு மேல் செலுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று தெரிகிறது.

    முன்னதாக இந்த திட்டம் 2 நிலைகளில் கையகப்படுத்தப்படுவதாக இருந்தது. அதன்படி சென்னை பெரு நகர மேம்பாட்டு ஆணையம் அனைத்து பறக்கும் ரெயில் நிலையங்களையும் வணிக ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்றும், செயல்பாடு மற்றும் பராமரிப்பை தெற்கு ரெயில்வே நிர்வகிக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது. அடுத்த கட்டத்தில் பறக்கும் ரெயில் சேவை முழுவதையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. பறக்கும் ரெயில் முதலில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைக்கப்பட இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. சென்னை கடற்கரை மற்றும் பூங்கா ரெயில் நிலையங்களுக்கிடையே புதிய வழித் தடத்தை அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சிக்கல் எழுந்தது.

    இதனால் 2018-ம் ஆண்டு இந்த திட்டத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×