search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்- ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி அறிவிப்பு
    X

    அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்- ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி அறிவிப்பு

    • எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பணியாற்றும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. இன்று மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    இடைத்தேர்தலில் போட்டியிட இன்று மதியம் வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசும் இன்றுதான் மனு தாக்கல் செய்தார். தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    என்றாலும் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இடையேதான் வழக்கம் போல பலப்பரீட்சை உருவாகி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வமும் போட்டி வேட்பாளரை அறிவித்ததால் அ.தி.மு.க. வேட்பாளராக யார் கருதப்படுவார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதுபோல யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதிலும் பரபரப்பு நிலவியது.

    இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க.வின் அவை தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி அவர் பொதுக்குழு உறுப்பினர்களில் 98 சதவீதம் பேரிடம் கையெழுத்து பெற்று தேர்தல் ஆணையத்திடம் நேற்று சமர்பித்தார்.

    அதை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமாருக்கு டெல்லி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பியது.

    அதில், "அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஏ, பி படிவத்தில் கையெழுத்திட்டு வழங்கும் அதிகாரம் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும்" என்று கூறி இருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள வேட்பாளருக்கு அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியானது. இதை தேர்தல் அதிகாரி சிவக்குமார் உறுதிப்படுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், "தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் எனக்கு வந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நான் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்வேன்.

    அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தரும் ஏ, பி படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்" என்று கூறினார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பணியாற்றும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    இதனால் உற்சாகம் அடைந்துள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்று தங்களது பிரசாரத்தை சுறுசுறுப்புடன் தொடங்கி உள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஈரோடுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

    Next Story
    ×