search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் போட்டி போட்டு மனு
    X

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் போட்டி போட்டு மனு

    • ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை இழந்துள்ளார்.
    • தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த இரட்டை தலைமை பிரச்சினைக்கு நேற்று பொதுக்குழு கூட்டத்தில் முடிவு காணப்பட்டது.

    சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு அதிரடி திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

    பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்து பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அது போல கட்சி சட்டவிதி 35-ன்படி ஓ.பன்னீர் செல்வத்தை பொருளாளர் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை இழந்துள்ளார். அடுத்த கட்டமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி அந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறிப்பதற்கு ஆலோசனை நடந்து வருகிறது.

    எடப்பாடி பழனிசாமி அணியினரின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் போன்றவர்களும் அ.தி.மு.க.வில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி இன்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் மற்றும் கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை எதிர்த்தும் கோர்ட்டு மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பன்னீசெல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர். கோர்ட்டில் எத்தகைய ஆவணங்களை தாக்கல் செய்வது? என்பது பற்றி இன்று ஓ.பன்னீர் செல்வம் அணியின் வக்கீல்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.

    கோர்ட்டு மூலம் அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடைபெற முடியுமா? என்றும் ஆலோசித்தனர். ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் அடுத்தடுத்து 2 தடவை அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார்.

    அந்த 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதோடு கட்சி பதவி தொடர்பாக கோர்ட்டுக்கு வரக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு கோர்ட்டு அறிவுறுத்தியது. எனவே கோர்ட்டை நம்பி பயன் இல்லை என்று ஓபன்னீர் செல்வம் தரப்பினர் கருதுகிறார்கள்.

    தற்போது ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு உள்ள ஒரே அடைக்கலம் தலைமை தேர்தல் ஆணையம் தான். தேர்தல் ஆணையம் மூலம் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு முட்டுக்கட்டை போட முடியும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், 'சென்னையில் ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. கட்சியின் உட்பிரிவுக்கு எதிராக திருத்தங்கள் கொண்டுவந்து தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர்.

    திருத்தங்களின் அடிப்படையில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளனர். இந்த முடிவை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது. அவர் இடைக்கால பொதுச் செயலாளர் என்பதற்கு அங்கீகாரமும் கொடுக்கக் கூடாது' என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேற்றே பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், அது தொடர்பான தகவல்களை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துவிட்டனர். அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது குறித்து விரிவாக அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

    குறிப்பாக அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களில் 97 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பொதுக்குழு முடிவுக்கு ஒப்புதல் அளித்திருக்கும் தகவலையும் தெரிவித்து உள்ளனர். மேலும் கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது என்றும் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் போட்டி போட்டு மனு செய்திருப்பதால், அடுத்த கட்டமாக தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை உடனடியாக முடிவை சொல்லுங்கள் என்று எந்தக் கட்சி தலைவரும் வலியுறுத்த முடியாது.

    மேலும் கோர்ட்டுகளில் தேதி குறிப்பிட்டு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது போல தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாது. கட்சி பிரச்சினைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டால் அது தொடர்பான சட்ட நிபுணர்களுடன் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள்.

    சட்ட நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் இதற்கு முந்தைய உதாரணங்கள் ஏதேனும் இருப்பின் அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவை வெளியிடுவார்கள். ஆனால் இதற்கு எந்த காலக்கெடுவையும் தேர்தல் ஆணையம் தெரிவித்ததில்லை. எனவே தேர்தல் ஆணையத்தின் முடிவு எப்போது வெளியாகும் என்று யாருக்கும் தெரியாது.

    தேர்தல் ஆணையம் இதே போன்ற சிக்கல்களில் இதற்கு முன்பு என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை முக்கியமாக ஆய்வு செய்வார்கள். எனவே கோர்ட்டை விட தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுதான் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையிலான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையிலான சர்ச்சை விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் முன்பு 2 முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கும், திருநாவுக்கரசருக்கும் இடையே அதிகார போட்டி எழுந்தபோது இருவரும் இதே போன்று தேர்தல் ஆணையத்தை அணுகினார்கள்.

    திருநாவுக்கரசர் தனக்கு 7 எம்.பி.க்கள், 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதாக கூறினார். ஆனால் ஜெயலலிதா தனக்கு அ.தி.மு.க.வில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களும், தொண்டர்களின் ஆதரவும் இருப்பதாக தெரிவித்தார்.

    அது மட்டுமின்றி ஜெயலலிதா தேர்தல் மூலம் தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆதாரங்களையும் வழங்கினார். இதையடுத்து 1994-ம் ஆண்டு இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்த தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னத்தையும், கட்சி கொடியையும் வழங்கி உத்தரவிட்டது. இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் நீதி வழங்கியது.

    இதேபோன்றுதான் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் முலாயம்சிங் யாதவுக்கும், அவரது மகன் அகிலேஷ் யாதவுக்கும் அதிகார போட்டி எழுந்தபோது கட்சியில் 90 சதவீத எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக இருப்பதாக ஆதாரங்களை அகிலேஷ் யாதவ் கொடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு அகிலேஷ் யாதவுக்குத்தான் சமாஜ்வாடி கட்சி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.

    இந்த முன்னுதாரண தீர்ப்புகளின் மூலம் எப்படியும் அ.தி.மு.க.வை தங்களது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வந்துவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நம்பிக்கையுடன் உள்ளனர். தேர்தல் ஆணையத்தில் இதுவரை அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை உள்ளதாக ஆவணங்கள் உள்ளன.

    இதை ஏற்க வேண்டாம் என்றும், அந்த பதவிகள் காலாவதி ஆகிவிட்ட தாகவும், ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். இதை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வமும் கடிதம் கொடுத்துள்ளார்.

    இவர்களில் யாருக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்பதை பொறுத்துதான் அ.தி.மு.க.வின் எதிர்காலமும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் எதிர்காலமும் அமையும்.

    Next Story
    ×