search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தி.மு.க கூட்டணி எம்.பி.க்கள் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை- அண்ணாமலை கடும் தாக்கு
    X

    தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தி.மு.க கூட்டணி எம்.பி.க்கள் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை- அண்ணாமலை கடும் தாக்கு

    • ஈரோட்டில் எல்லா சாலைகளும் சேதமடைந்துள்ளது.
    • ஒருகாலத்தில் நமது காவல்துறை உலகப் புகழ் பெற்றதாக இருந்தது.

    ஈரோடு:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை 2-வது நாளாக வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டார். பின்னர் சூரம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது முதல்வர், முதல்வர் மகன், அமைச்சர்கள் என அனைவரும் இங்கு முகாமிட்டு இருந்தனர். காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்தால், தேனாறும், பாலாறும் ஈரோட்டில் ஓடும் என்று சொன்னார்கள்.

    மத்திய அரசு கொடுத்த நிதியை திருடாமல் மக்களுக்கு கொடுத்தால், தேனாறும், பாலாறும் தானகவே ஓடும். ஈரோட்டில் எல்லா சாலைகளும் சேதமடைந்துள்ளது. ஒருகாலத்தில் நமது காவல்துறை உலகப் புகழ் பெற்றதாக இருந்தது.

    அதே அளவுக்கான திறன் வாய்ந்தவர்கள் இன்று அந்த துறையில் உள்ளனர். ஆனால் திமுக வந்தவுடன் அவர்களின் கைகளைக் கட்டி போட்டுவிட்டு வேலை செய்யச் சொன்னால் எப்படி வேலை செய்வார்கள்? ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசுமளவிற்கு இங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு 2 நாட்களே ஆன ஒரு நபர், நேராக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசுகிறார்.

    காவல்துறை பிடிக்கும்போது கூட இன்னொரு பெட்ரோல் குண்டை வீசுகிறார். அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.

    ஆனால் பல்லடம் அருகே ஒரு தோட்டத்தில் குடித்து விட்டு தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்ட குடும்பத்தினர் 4 பேரை கொலை செய்தனர். குடிப்பதை தட்டிக்கேட்டதால் கொலையானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் தருகிறார். இதுபோன்ற அநியாயம் இந்தியாவில் எங்கும் பார்த்தது இல்லை. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 511 தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். இதில் முக்கியமான 20 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல், 90 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகக் கூறுகின்றனர். ஆசிரியர் தகுதி தேர்வை எழுதிவிட்டு 10 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆசிரியர்களின் வயது வரம்பை 56 என உயர்த்தி உள்ளனர்.

    இன்னொருபுறம் செவிலியர் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதியை எதிர்த்து ஒவ்வொரு புறமும் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் 67 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் இதில் முறைகேடு நடந்துள்ளது. ஏழை மக்கள் இருக்கக் கூடாது என பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் 38 தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் வெற்றி பெற்றும் ஒரு பயனும் இல்லை. மக்களின் வளர்ச்சிக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    நமது கலாச்சாரத்தை போற்றும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை வைத்த நிகழ்விற்கு கூட இந்த எம்.பி.க்கள் போகவில்லை. தொழிற்சாலை நகரங்களான ஈரோடு, பெருந்துறை, திருப்பூரில் இருப்பவர்கள் எல்லாம், தொழிலை மூடிவிடாலாம் என்று நினைக்கும் அளவிற்கு வாட்டி வதைக்கின்றனர். ஈரோடு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமானால் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து ஈரோடு எம்.பி. செல்ல வேண்டும். ஈரோடு மார்க்கெட்டை கட்டிவிட்டு இன்னும் திறக்கவில்லை.

    ஈரோடு அமைச்சர் முத்துசாமி மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. ஈரோட்டிற்கு பல திட்டங்களை அவர் கொண்டு வந்துள்ளார். ஆனால், அவர் தி.மு.க.வில் சேர்ந்த பின் மது குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது என்கிறார்.

    இந்தியா தலைநிமிர்ந்து நிற்க உங்கள் வாக்கினை பா.ஜ.க.விற்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×