search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.68 ஆயிரத்தை இழந்த பெண்
    X

    கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.68 ஆயிரத்தை இழந்த பெண்

    • சைபர் கிரைம் போலீசார் மோசடி கும்பலின் வங்கி கணக்கை முடக்கி வங்கி அதிகாரிகளுடன் பேசி ரூ.68 ஆயிரத்தை மீட்டு அந்த பெண்ணிடம் கொடுத்தனர்.
    • மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    இன்றைய நவீன உலகில் ஆன்லைன் மோசடி பல வகைகளில் நடைபெற்று வருகின்றன. செல்போனில் வரும் மெசேஜ் மற்றும் ஆன்லைனில் வரும் விளம்பரத்தை நம்பி பணத்தை பறிகொடுப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

    அதேபோல் ஈரோட்டில் ஒரு பெண் ஆன்லைன் மோசடி கும்பலிடம் கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி பணத்தை இழந்து உள்ள சம்பவம் நடந்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின் செல்போன் எண்ணிற்கு சமீபத்தில் ஒரு மெசேஜ் வந்துள்ளது.

    அந்த மெசேஜை அவர் திறந்து பார்த்தபோது அதில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் பெறலாம் என கவர்ச்சிகரமான திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு செல்போன் எண்ணும் பதிவிடப்பட்டிருந்தது.

    இது உண்மை என நம்பி அந்த பெண் அந்த மெசேஜில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசிய நபர் நீங்கள் குறைந்த முதலீடு செய்தால் சில மாதங்களில் நிறைய லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    அதன்படி அந்தப் பெண் ரூ.50 ஆயிரத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் 2-வது முறையாக ரூ.32 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். ரூ 14 ஆயிரம் மட்டும் அந்த பெண்ணிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு மீதம் உள்ள ரூ. 68 ஆயிரத்தை அனுப்பவில்லை.

    இது குறித்து அந்த பெண் கேட்டபோது ஒவ்வொரு நாளும் ஏதாவது காரணம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இது குறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த மோசடி கும்பல் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த செல்போன் அழைப்பு பெங்களூரில் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. அந்த வங்கி கணக்கு ஆந்திராவில் உள்ள வங்கி கணக்கு என தெரிய வந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த வங்கி கணக்கை முடக்கி வங்கி அதிகாரிகளுடன் பேசி ரூ.68 ஆயிரத்தை மீட்டு அந்த பெண்ணிடம் கொடுத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×