search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரே நாளில் 104 பேர் பாதிப்பு- கோவையில் 2 பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
    X

    ஒரே நாளில் 104 பேர் பாதிப்பு- கோவையில் 2 பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

    • கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கொரோனா பரவல் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி மற்றும் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றானது ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி வந்தது. இதனால் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 தினங்களாக பாதிப்பானது 50-யை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 89 பேருக்கு தொற்று பதிவாகி இருந்த நிலையில், நேற்று 104 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

    6 மாதங்களுக்கு பிறகு நேற்று மாவட்டத்தில் தொற்று பாதிப்பானது 100யை கடந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று தொற்றில் இருந்து குணமடைந்து 22 பேர் வீடு திரும்பினர். இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 727 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளாக ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, தொண்டாமுத்தூர், எஸ்.எஸ்.குளம், குரும்பபாளையம் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டம் முழுவதும் தொற்று பரவல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி மற்றும் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் குரும்பபாளையம் ஸ்ரீகார்டன் முதல் தெருவில் ஒரே வீட்டில் 4 பேருக்கும், ஆர்.எஸ்புரத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கும் தொற்று உறுதியானதை அடுத்து அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக (மைக்ரோ) அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் புதிய கிளாஸ்டர்கள் கண்டறியப்பட்டுள்ள 2 பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட தூய்மை பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர். தொடர்ந்து தொற்றுக்கு ஆளானவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் அருணா கூறுகையில், ஒரே வீட்டில் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டால் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் முக கவசம் அணிய வேண்டும். அலட்சியம் ஆபத்தை விளைவிக்கும் என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

    கோவையில் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து நேற்றுமுன்தினம் முதல் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியதாவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி பகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.2,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    Next Story
    ×