என் மலர்
தமிழ்நாடு

பைக் மீது அரசு பஸ் மோதல்- காதலி கண்முன் வாலிபர் பலி
- பலியான ஜெகன்குமார் உடல் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் ஜெகன்குமார்(29). இவர் தனியார் செல்போன் கடையில் வேலைபார்த்து வந்தார். இவருடன் கோம்பையை சேர்ந்த அன்னபூரணி(18) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமும் பணிமுடிந்ததும் அன்னபூரணியை அவரது வீட்டில் இறக்கிவிட்டு மீண்டும் காலையில் வேலைக்கு அழைத்து வருவது ஜெகன்குமாருக்கு வழக்கம். அதன்படி நேற்று இரவு பணிமுடிந்து கடையில் இருந்து அன்னபூரணியை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
உத்தமபாளையம் சாலையில் துர்க்கையம்மன் கோவில் அருகே குமுளியில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜெகன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அன்னபூரணி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான ஜெகன்குமார் உடல் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.