search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை கார் வெடிப்பு சம்பவம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    X

    கோவை கார் வெடிப்பு சம்பவம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்புவுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனை கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    கோவையில் தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 23-ந்தேதி அதிகாலையில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் முபின் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடனடியாக நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவரது நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன், தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

    முன்னதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்புவுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×