search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

    • பக்ரீத் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
    • பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :-

    'தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்!

    அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்' என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டு தோறும் கொண்டாடுகிறார்கள்.

    நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும்; கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, தியாகப் பெருநாளைப் பாதுகாப்புடன் கொண்டாடிட வேண்டும் எனக்கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி:-

    நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்றத் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலை நிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    இந்த இனிய திருநாளில் எல்லோரிடத்திலும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனித குல நல்வாழ்விற்கு மகோன்னத மாய் வழிகோலட்டும். எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    சமீப காலமாக, இஸ்லாமியர்கள் சந்தித்து வருகிற அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்களது உடமைகள் புல்டோசர்கள் மூலமாக இடித்து தள்ளப்படுகின்றன. பா.ஜ.க.வின் புல்டோசர் கலாச்சாரம் சிறுபான்மையின மக்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய அடக்குமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் எடுக்கின்ற நடவடிக்கைகள் கூட உரிய பலனைத் தர முடியாத சூழல் உருவாகி வருகிறது. இந்த அவல நிலையில் இருந்து சிறுபான்மையின மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

    தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும். இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும்.

    பக்ரீத் திருநாளை முன்வைத்து இஸ்லாம் சொல்லும் செய்தியைத் தான் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு மதங்கள் கூறுகின்றன. அனைத்து மதங்களும் சொல்லும் செய்தி அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்பது தான். இந்தப் பாடத்தை புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும். அதன்படி அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற உணர்வுடன், அரபா பெரு வழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.

    தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச்சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    உலகளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பண்டிகை பக்ரீத் பண்டிகை. இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் 5-வது கடமையாக ஹஜ் புனித பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனித பயணத்தின் இறுதி கடமையாக இறைவனுக்கு பலியிட்டு அந்த இறைச்சியை ஏழை, எளியவர்களுக்கும், நண்பர்களுக்கும் அளித்து இந்நாளை கொண்டாடுவது இப்பண்டிகையின் தனிச்சிறப்பு.

    பக்ரீத் திருநாளில், நாட்டில் சமத்துவமும், சகோதரத்துவமும் தழைக்கவும், எல்லோருக்கும் எல்லா நன்மைகளும், வளமும், நலமும் பெறவும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

    பக்ரீத் போதிக்கும் பாடத்தை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் உள்ளிட்ட அனைத்தும் தழைத்தோங்க வேண்டும் என்று கூறி, அத்தகைய நிலையை உருவாக்குவதற்கு உழைக்க இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    அன்பு, அறம், அமைதி, ஈகை, இரக்கம், கருணை ஆகிய நற்பண்புகளுடன் மனிதகுலம் அடுத்தக்கட்ட வளர்ச்சி பாதையில் செல்வதற்கு விடாமுயற்சியுடன் ஒற்றுமையாக பாடுபடுவோம். மதநல்லிணக்கத்தை பேணி சமத்துவ, சகோதரத்துவத்துடன் அனைவரும் வாழ்வில் மென்மேலும் உயரவும், இன்புற்று வாழவும் இந்த பக்ரீத் திருநாள் ஆசி புரியட்டும்.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

    மாபெரும் இறைத்தூதர்கள் இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீல் ஆகியோரின் அரும்பெரும் தியாகத்தையும் இறைவனுக்கு அடிப்பணியும் ஒப்பற்ற தன்மையையும் நினைவு கொள்ளும் வகையில் தியாகத்திருநாள் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது.

    தியாகத்திருநாளை கொண்டாடும் இத்தருணத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் சமூக நல்லிணக்கமும் நாட்டில் தழைத்தோங்குவதற்கும், கொடுங்கோன்மை, அடக்குமுறை, சர்வாதிகாரம் முதலிய தீமைகள் வீழ்வதற்கும் இறைவனை வேண்டுவோம். நாட்டில் அமைதியும் வளமும் சுதந்திரமும் உரிமைகளும் மேலோங்குவதற்கும் பிரார்த்தனை செய்வோம்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பலரும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×