search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
    X

    முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

    • காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தவர்.
    • பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறந்த முதலமைச்சராக திகழ்ந்தார்.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் தமிழக அரசின் சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    வி.பி.சிங் சிலை திறப்பு விழா நாளை (27-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவரது சாதனைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கி பேசுகிறார்.

    வி.பி.சிங் சட்டக் கல்லூரியில் படித்த காலத்திலேயே காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். சர்வோதய சமாஜத்தில் இணைந்து, பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களை தானமாக வழங்கியவர்.

    சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், வர்த்தகத் துறை துணை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வி.பி.சிங் பதவிகளையும் வகித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 1980-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறந்த முதலமைச்சராக திகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, வி.பி.சிங் 1984-ம் ஆண்டு நிதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்தார். பின்பு, 1989-ம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தவர். சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டினார். அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார்.

    பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்திய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்.

    இத்தகைய சிறப்புமிக்க முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், மற்றும் அமைச்சர் அன்னாரது குடும்பத்தினர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    Next Story
    ×