search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் மனைவியை கொன்று சாமியாராக மாறிய கணவர் பரபரப்பு வாக்குமூலம்
    X

    சென்னையில் மனைவியை கொன்று சாமியாராக மாறிய கணவர் பரபரப்பு வாக்குமூலம்

    • மனைவியை கொலை செய்து விட்டு சாமியாராக மாறிய ரமேஷ் கைது செய்யப்பட்டார்.
    • சாமியாராக மாறிய பிறகு பிச்சை எடுத்தே சாப்பிட்டு வந்தேன்.

    சென்னை:

    சென்னை ஓட்டேரி ஏகாங்கி புரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது காதல் மனைவி வாணியை 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.

    இதுதொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளி ரமேஷ் போலீசில் பிடிபடாத நிலையில் தற்போதைய ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமறைவான ரமேசை தேடி வந்தார். மனைவியை கொலை செய்து விட்டு சாமியாராக மாறிய ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கியுள்ள ரமேஷ் மனைவி வாணியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றியும், சாமியாராக மாறியது குறித்தும் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நானும், வாணியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். 2 மகன்கள் பிறந்த நிலையில் வாணி வேலைக்கு சென்று விட்டு தாமதமாக வீடு திரும்பி வந்தாள். இது எனக்கு அவள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி நான் அடிக்கடி கேட்டு வந்தேன்.

    அப்போது வாணி என்னை திட்டுவதையே வழக்கமாக வைத்திருந்தார். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று தாமதமாக வந்த வாணியிடம் அதுபற்றி கேட்டேன்.

    அப்போது நீ என்ன ஒழுங்கா? என்று கூறி வாணி என்னிடம் சண்டை போட்டாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனால் எரிச்சல் அடைந்த நான் வாணியை சரமாரியாக தாக்கினேன். இதில பலத்த காயம் அடைந்த அவள் உயிரிழந்தாள். இதனால் என்ன செய்வது? என்று தெரியாமல் உடலை மூட்டை கட்டி கட்டிலுக்கு கீழே வீசிவிட்டு தப்பிச் சென்றேன்.

    மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்துக்கு சென்று விட்டால் அடையாளம் காண்பது சிரமம் என்று நினைத்து திருவண்ணாமலைக்கு சென்றேன். அங்கு சில நாட்கள் சுற்றி திரிந்து விட்டு திருப்பூருக்கு சென்று அங்கு வேலை செய்தேன்.

    அப்போது உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அங்கிருந்து வடலூர் ஆசிரமத்துக்கு சென்றேன். அங்கு வைத்து சாப்பாடுகூட கிடைக்காமல் திண்டாடினேன். பின்னர்தான் சாமியாராக மாறினால் என்ன? என்கிற எண்ணம் ஏற்பட்டது. மீண்டும் திருவண்ணாமலைக்கு சென்று அங்கிருந்த சாமியார் ஒருவரிடம் தீட்சை எடுத்து ருத்திராட்ச மாலையை அணிந்து கொண்டு காவி உடையை உடுத்தினேன். பின்னர் அப்படியே பல ஊர்களுக்கு சென்றேன். மனைவியை கொலை செய்த பாவம்தான் தன்னை துரத்துகிறது என்று எண்ணி பாவத்துக்கு பரிகாரம் தேடுவதாக நினைத்து காசி உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு சென்றேன்.

    ரிஷிகேஷ், பூரி ஜெகநாதர் கோவில், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சென்று விட்டு தமிழகத்துக்கு திரும்பினேன். சாமியாராக மாறிய பிறகு பிச்சை எடுத்தே சாப்பிட்டு வந்தேன். அதன் மூலம் கிடைக்கும் சிறிய தொகையை வேறு ஒரு சாமியாரின் செல்போன் எண்ணில் இருந்து ஜி.பே. மூலமாக மகன்களுக்கு பணம் அனுப்பி வந்தேன்.

    போலீசில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக செல்போன் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து வந்தேன். இந்த நிலையில்தான் சென்னைக்கு வந்த இடத்தில் போலீசில் சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு ரமேஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×