search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் கடைகள் அடைப்பு

    • திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்தியும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய 8 டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அழைப்பு விடுத்தது.

    இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், இயக்கத்தினர், அமைப்பினர், வணிகர் சங்கத்தினர், மாணவர் அமைப்பினர் முழு ஆதரவு தெரிவித்தனர்.

    அதன்படி இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் காய்கறி, மளிகை, ஓட்டல், செல்போன், பேன்சி, அரிசிக்கடை உள்பட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டன.

    தஞ்சையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பர்மா பஜார், கீழவாசலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் நகரில் பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டன. காமராஜர் மார்க்கெட், உழவர் சந்தை மூடப்பட்டதால் வெறிச்சோடின.

    கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பூதலூர், வல்லம், திருவையாறு உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. அதே போன்று ஆட்டோக்களும் ஓடவில்லை. ஆட்டோக்கள் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.

    திருவாரூர் விஜயபுரம் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதனால் திருவாரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதேபோன்று காவல்துறை வாகனங்களும் திருவாரூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் 45 அரசு பஸ்களும் இன்று இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம், திருப்பூண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட கடைகள், 3000 உணவகங்களை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 13 மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார் கோவில், திருக்கடையூர், சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் 11,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பால், மருத்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

    உணவகம், பேக்கரி, டீக்கடைகள், ஸ்டேஷனரி என மொத்தம் 54 கடைகளில் 53 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஒரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது.

    திருச்சி மாநகரின் பிரதான மார்க்கெட் ஆன காந்தி மார்க்கெட் இன்று வழக்கம் போல் இயங்கியது. பஸ்கள், ஆட்டோ, கார்கள் வழக்கம் போல் இயங்கியது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய வட்டங்கள் டெல்டா பாசனத்தில் காவிரி நதிநீர் மூலம் பாசனம் பெரும் பகுதியாக இருந்து வருகிறது.

    இதில் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கீரமங்கலம் மற்றும் கடைமடை பகுதியான மேற்பனைக்காடு உள்ளிட்ட 2 ஊர்களில் மட்டும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    கீரமங்கலம் பேரூராட்சியில் டீக்கடைகள், உணவகங்கள், பூ கமிஷன் கடைகளை தவிர்த்து 80 சதவீத வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே போல மேற்பனைகாடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் சுமார் 210 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புத்தூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    முழு அடைப்பு காரணமாக டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விவசாயிகள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    திருச்சியில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டெல்டா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. அரசு, தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. ஆட்டோ, வேன்களும் இயக்கப்பட்டது.

    மேலும் டெல்டா மாவட்டங்களில் மருந்து, பால் கடைகள் மட்டும் இயங்கின. பெட்ரோல் பங்குகளும் செயல்பட்டது.

    எனினும் கடைகள் அடைக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்கள் முடங்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×