search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 மசோதா தீர்மானத்தை கண்டித்து சட்டசபையில் இருந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
    X

    10 மசோதா தீர்மானத்தை கண்டித்து சட்டசபையில் இருந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

    • துணைவேந்தர் பதவி என்பது ஒரு அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
    • தமிழகத்தில் மக்கள் பிரச்சனை நிறைய இருக்கிறது.

    சென்னை:

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

    சட்டசபையில் கவர்னர் குறித்து யாரும் பேசக்கூடாது என நீங்கள் ஆரம்பத்தில் கூறினீர்கள். ஆனால் இப்போது ஒவ்வொருவரையும் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதாக சபாநாயகரை பார்த்து குற்றம் சாட்டினார்.

    அப்போது சபாநாயகர் கூறும்போது, எம்.எல்.ஏ.க்கள் இங்கு கோப்புகள் பற்றி பேசினார்கள். கவர்னரை தனிப்பட்ட முறையில் இங்கு பேசவில்லை என்றார்.

    இதற்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் பேசும்போது, குழந்தை தனமாக, சிறுபிள்ளைத்தனமான என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். சட்டமன்றம் மிகப்பெரிய மாண்பும், மரபும் கொண்டது என்றார்.

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், குழந்தை தனம் என்பது கள்ளம் கபடம் இல்லாத மனசுக்கு சொந்தக்காரர் என்று கூட அர்த்தம் உண்டு. இந்த தீர்மானங்கள் மீது தான் உறுப்பினர்கள் பேசுகிறார்கள். நாளைக்கு நீங்களே கூட கவர்னர் ஆகலாம் என்றார். (அப்போது சபையில் பலத்த சிரிப்பொலி நிலவியது).

    நயினார் நாகேந்திரன், பல்கலைக்கழகங்களில் வேந்தர்களை கவர்னரே நியமிக்கலாம் என்ற தீர்மானத்தை இதே சபையில் 1998-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரே கொண்டு வந்து இருக்கிறார். ஆனால் இப்போது அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'அப்போதெல்லாம் துணை வேந்தரை நியமிக்கும் போது அரசின் பரிசீலனைக்கு கொண்டுவந்து கலந்து பேசி தான் நியமித்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. அதனால் இந்த நிலை என்றார்.

    நயினார் நாகேந்திரன்:- துணைவேந்தர் பதவி என்பது ஒரு அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    இவ்வாறு பேசியதும், அதற்கு அமைச்சர்கள் ரகுபதி, பொன்முடி ஆகியோர் விரிவான விளக்கம் அளித்தனர். கவர்னர் அரசியல் சட்டத்தை மீறி அரசியல் செய்கிறார். எங்களை பொறுத்தவரை துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு வேண்டும் என்றனர்.

    இதை ஏற்காத நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்தார். அவருடன் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் வெளியேறினார்கள்.

    பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறும்போது, 'தமிழகத்தில் மக்கள் பிரச்சனை நிறைய இருக்கிறது. அந்த பிரச்சனைகளை மூடி மறைக்க கவர்னர் விஷயத்தை இந்த அரசு கையில் எடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் தி.மு.க. அரசுக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கருதி கவர்னரை பற்றி கூறுகிறார்கள்.

    எனவே முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானங்களை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

    Next Story
    ×