என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாளை பாஜக மையக்குழு கூட்டம்
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்துள்ளது.
- ஆலோசனை கூட்டத்தில் இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வெ.ரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன.
இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு கட்சி தலைவர்களும் முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்துள்ளது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இது தொடர்பான பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நாளை கடலூரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். கூட்ட முடிவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாலை மையக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.






