search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சி துவாக்குடியில் பெல் நிறுவன அதிகாரியிடம் ரூ. 49 லட்சத்தை சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்
    X

    திருச்சி துவாக்குடியில் பெல் நிறுவன அதிகாரியிடம் ரூ. 49 லட்சத்தை சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்

    • ஒருநாள் திடீரென அந்தத் தொகை முழுவதையும் கிரிப்டோ கரன்சியாக மாற்றி ஏமாற்றுகிறார்கள்.
    • மோசடி கும்பல் வடமாநிலங்களில் இருந்து அதிகம் செயல்படுகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சியில் சமீபகாலமாக பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்சி டிரேடிங் என்ற பெயர்களில் ஆன்லைன் மோசடி கும்பல் இளைஞர்களின் பணம் பறிப்பதாக திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசாருக்கு அதிக புகார்கள் வருகின்றன. இதற்கிடையே திருச்சி துவாக்குடி பெல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி இந்த மோசடி கும்பலிடம் ஒரு ரூ. 49 லட்சம் பணத்தை இழந்து தவித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த அதிகாரி மாதம் 2 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறுகிறார். மேலும் குடும்பத்திலும் நல்ல வசதி உள்ளது. அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சில லிங்குகளை மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர். அதில் கிரிப்டோ கரன்சி டிரேடிங் செய்தால் பணத்தை இரட்டிப்பு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    இதை நம்பிய அவர் முதலில் குறைந்த தொகையை முதலீடு செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கி கணக்குக்கு ரூ. 15,000 லாபமாக வந்து சேர்ந்தது. உடனே அந்த பணத்தை அவர் தனது கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டார்.

    இதனால் அவருக்கு மேலும் பணம் சம்பாதிக்கும் ஆசை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக பல்வேறு தவணையாக ஆன்லைன் மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்குக்கு ரூ. 49 லட்சம் தொகையை செலுத்தினார். இந்த தொகைகளை அவர் முதலீடு செய்து ஒவ்வொரு முறை டிரேடிங் செய்யும் போதும் இரட்டிப்பு தொகையை திரையில் காண்பித்துள்ளனர்.

    ஆனால் அவரது வங்கி கணக்குக்கு வரவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அந்த தொகையை மோசடி கும்பல் கிரிப்டோ கரன்சியாக வெளிநாடுகளுக்கு மாற்றி பெல் அதிகாரியை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். பின்னர் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டது.

    இதனால் அதிர்ச்சி அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் இழந்த தொகையை மீட்க முடியவில்லை.

    இதுபோன்ற தினமும் புகார்கள் வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

    ரூ. 30 ஆயிரம், 50 ஆயிரம், ரூ. ஒரு லட்சம் என அவர்கள் இழந்து நிற்கிறார்கள்.

    இந்த மோசடி கும்பல் வடமாநிலங்களில் இருந்து அதிகம் செயல்படுகிறார்கள். ஆகவே அவர்களை பிடிப்பது என்பது போலீசாருக்கு சவால் ஆனதாக உள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் தொடர்பு வைத்துக் கொண்டு மோசடி செய்யும் பணத்தை கிரிப்டோ கரன்சியாக எளிதில் மாற்றி விடுகிறார்கள்.

    இந்த மோசடி தொடர்பாக திருச்சி சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் கூறும்போது,

    முதலில் நமது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை அல்லது கிரிப்டோ கரன்சி டிரேடிங் என்ற பெயரில் டெலிகிராம் வாயிலாகவோ வாட்ஸப் வாயிலாகவோ லிங்குகளை அனுப்புகிறார்கள். பின்னர் சில யூடியூப் வீடியோக்களை அனுப்பி சப்ஸ்கிரைப் பண்ணுங்க... லைக் பண்ணுங்க... ஷேர் பண்ணுங்க... என சொல்கிறார்கள். இதில் ஐந்தாறு டாஸ்க் வந்தவுடன் முதலீட்டு தொகைக்கு ஏற்ப ரூ.300, 600 என முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்புகிறார்கள்.

    ஓரிருமுறை கமிஷன் தொகை கொடுத்து நம்பி க்கையை ஏற்படுத்துகிறார்கள்.

    அதன் பின்னர் கமிஷன் தொகை சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்குக்கு வராது. திரையில் காண்பிக்கும் தொகையை கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு சிலர் பல லட்சங்களை தொடர்ச்சியாக முதலீடு செய்கிறார்கள். பின்னர் ஒருநாள் திடீரென அந்தத் தொகை முழுவதையும் கிரிப்டோ கரன்சியாக மாற்றி ஏமாற்றுகிறார்கள்.

    ஓரிரு முறை சொற்பத்தொகை முதலீடு செய்து லாபத்தை எடுத்துக்கொண்டு லிங்கை விட்டு வெளியேறியவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் என்றார்.

    Next Story
    ×