search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆறுமுகநேரியில் பஸ்சில் ஏறி டிரைவருக்கு அடி-உதை: வாலிபர் கைது
    X

    ஆறுமுகநேரியில் பஸ்சில் ஏறி டிரைவருக்கு அடி-உதை: வாலிபர் கைது

    • வாலிபர் பஸ்சை வழிமறித்து நிறுத்தி டிரைவரான ஸ்டீபனிடம் தகராறு செய்தார்.
    • காயமடைந்த டிரைவர் ஸ்டீபன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் டேனியல் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 51). இவர் நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ் டிரைவராக உள்ளார்.

    இவர் கடந்த 8-ந்தேதி மாலையில் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி பஸ்சை ஓட்டி வந்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் அருகே வரும் போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பஸ்சுக்கு இணையாகவும், முந்துவதுமாகவும் சென்றுள்ளார். பின்னர் அந்த வாலிபர் பஸ்சை வழிமறித்து நிறுத்தி டிரைவரான ஸ்டீபனிடம் தகராறு செய்தார். இதன் பின்னர் தொடர்ந்து சென்ற அந்த பஸ் ஆறுமுகநேரி பேயன்விளை பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளது.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தனது நண்பர்கள் 5 பேருடன் பஸ்சில் ஏறி டிரைவர் ஸ்டீபனை ஆபாசமாக திட்டி சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனால் பெண்கள் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் அலறினர். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் ஸ்டீபனை கொலை செய்து விடுவதாக மிரட்டியபடி அங்கிருந்து சென்று விட்டது.

    காயமடைந்த டிரைவர் ஸ்டீபன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஸ்டீபன் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனிடையே பஸ் டிரைவரை தாக்கிய இந்த சம்பவம் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் வலைத் தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வன் வழக்குபதிவு செய்து இதில் தொடர்புடைய வசந்த் என்பவரை இன்ஸ்பெக்டர் செந்தில் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×