என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் மூர்த்தி மீது அண்ணாமலை பரபரப்பு புகார்
- பத்திரப்பதிவு துறை ஊழல் இமாலய அளவில் நடக்கிறது.
- போராடினால்தான் இந்த நிலையை மாற்ற முடியும் என்றால் போராடவும் பா.ஜனதா தயார்.
சென்னை:
தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மீது பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் பத்திர பதிவு துறையில் அரசு விதித்துள்ள கட்டணத்திற்கு கூடுதலாக மேலும் ஒரு தொகை கட்ட பொது மக்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.
பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு செல்லும் இந்த மூர்த்தி கட்டண தொகையை வசூலிக்க தமிழகம் முழுவதும் புரோக்கர்களை அமைச்சர் நியமித்துள்ளார்.
தங்கள் கடின உழைப்பில் வீடு, நிலம் வாங்க விரும்பும் பொதுமக்கள் இந்த கூடுதல் கட்டணத்தை கட்டினால் தான் பத்திர பதிவே நடக்கும் என்ற நிலையில் தமிழகம் இருக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் கடவுளின் பெயரைக் கொண்ட புரோக்கர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் பணத்தை கட்டினால் போதும். பத்திரப்பதிவு துறை மாலையிலேயே பதிவு செய்து தந்துவிடும்.
ஒரு பதிவுக்கு குறைந்த பட்சம் ரூ.5,500 என்ற ரீதியில் கூடுதலாக வசூலிக்கிறார்கள். இந்த புரோக்கர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தினால் மிகப் பெரிய அளவில் பணம் கிடைக்கும்.
பத்திரப்பதிவு துறை ஊழல் இமாலய அளவில் நடக்கிறது. தினமும் கோடி கணக்கில் வசூல் நடக்கிறது. பத்திரப்பதிவு துறை வசூல் துறையாக மாறி உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறையினர் எங்கெங்கெல்லாமோ சோதனை நடத்துகிறார்கள். பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் மாலை 5 மணிக்குள் சென்றால் எவ்வளவோ கைப்பற்ற முடியும்.
போராடினால்தான் இந்த நிலையை மாற்ற முடியும் என்றால் போராடவும் பா.ஜனதா தயார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






