என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெம்மேலி அருகே சேதம் அடைந்த நிலையில் பழமையான ஆளவந்தார் கோவில்- பக்தர்கள் வேதனை
- இந்து சமய அறநிலையத்துறை தனி செயல் அலுவலர் நியமித்து மாமல்லபுரத்தில் நிர்வாகம் செய்து வருகிறது.
- வருவாயில் பல பெருமாள் கோவில்களுக்கு ஆன்மீக உற்சவ சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம்:
நெம்மேலியில் கடற்கரையை ஒட்டி 5 ஏக்கர் நிலத்தில் ஆளவந்தாரின் ஜீவசமாதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலி மற்றும் சுற்று வட்டார பகுதியில் 1,000 ஏக்கருக்கும் மேல் உள்ளது.
பல நூறு கோடி ரூபாய் சொத்துடைய ஆளவந்தார் அறக்கட்டளையை, இந்து சமய அறநிலையத்துறை தனி செயல் அலுவலர் நியமித்து மாமல்லபுரத்தில் நிர்வாகம் செய்து வருகிறது. இதன் வருவாயில் பல பெருமாள் கோவில்களுக்கு ஆன்மீக உற்சவ சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இப்பகுதியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பில் வைணவ திவ்விய பிரபந்த பாடசாலை கட்டுவதற்கு கடந்த 10-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதே வளாகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை ஆன்மீக சேவைக்கு எழுதி வைத்த அறக்கட்டளை நிறுவனர் ஆளவந்தாரின் கோவில் கட்டிடம் மிகவும் சேதமடைந்து உள்ளது.
மேலும் அந்த வளாகப் பகுதி முழுவதும் சீரழிந்து கிடக்கிறது. அங்குள்ள தீர்த்த குளம் பாம்புகளின் சரணாலயமாக மாறியுள்ளது.
இதனை முதலில் சரி செய்ய திட்டமிடாமல் பஸ் நிறுத்தமோ, ஆள் நடமாட்டமோ, எந்த வசதியும் இல்லாத, அடர்ந்த காட்டுப்பகுதியில் "வைணவ திவ்விய பிரபந்த பாடசாலை" கட்டிடம் கட்ட, அறக்கட்டளை நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவது ஏன்? என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.






