search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3-வது நாளாக போராட்டம்: மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு
    X

    அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3-வது நாளாக போராட்டம்: மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

    • மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • நகராட்சி அலுவலகத்திற்கு வருபவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் கடந்த 31-ந்தேதி நடந்தது.

    அப்போது கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள், கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர், பொறியாளர்கள் வராதது குறித்தும், குப்பைகளை அள்ளுவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினர். இதனால் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் தாக்கவும் முயற்சி செய்தனர்.

    அந்த சமயம் தி.மு.க. கவுன்சிலர் ரவிக்குமார் என்பவர் அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது நாற்காலியை தூக்கி வீசினார்.

    இந்த நிலையில் நாற்காலியை தூக்கி வீசிய தி.மு.க கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நகராட்சி ஆணையாளர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனாலும் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது. இதனால் தொடர்ந்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 3-வது நாளாக அ.தி.மு.க கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்கிறது.

    நாற்காலியை தூக்கி வீசிய தி.மு.க கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறியுள்ள அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியில் வராமல் உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இரு கட்சியினரும் மேட்டுப்பாளையம் போலீசில் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    இந்த நிலையில், போராட்டம் 3வது நாளாக நீடிப்பதையொட்டி நகராட்சி அலுவலகத்திற்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சியினர் அதிகளவில் திரண்டு வர இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அங்கு டி.எஸ்.பி. பால்ராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் நவநீத கிருஷ்ணன் (மேட்டுப்பாளையம்), ராஜசேகர்(காரமடை), நித்யா(அன்னூர்) தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நகராட்சி அலுவலகத்திற்கு வருபவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அலுவலகம் முன்பு கூட்டம் கூடாமலும் பார்த்து கொள்கின்றனர்.

    இதுதவிர நகராட்சி அலுவலகத்திற்கு கட்சியினர் வராத வகையில் 4 இடங்களில் தடுப்புகளும் வைத்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக மேட்டுப்பாளையத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    Next Story
    ×