என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- சுயமாக மருந்து, மாத்திரைகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
கடலூர்:
தமிழகத்தில் மழை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
புதுவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிர் இழந்து உள்ளனர். கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் உள்பட 6 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் சாரா செலின் பாலிடம் கேட்டபோது கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களை 24 மணி நேரமும் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லை.
தற்போது மழை காலம் என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வீட்டின் தோட்டத்தில் உள்ள டயர்கள் மற்றும் தேங்காய் ஓடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இதே போல் ஏ.சி. மற்றும் குளிர் சாதன பெட்டிகளில் தண்ணீர் இருந்தால் அவற்றை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவற்றில் தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும். 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி அதற்குரிய மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும்.
சுயமாக மருந்து, மாத்திரைகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






