search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மிளகாய் பொடி தூவி 50 பவுன் நகை, பணம் வழிப்பறி... 5 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை
    X

    போலீசார் விடிய, விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்ட காட்சி.

    மிளகாய் பொடி தூவி 50 பவுன் நகை, பணம் வழிப்பறி... 5 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

    • ரங்கநாதன், அன்பரசன் ஆகியோர் மீது கொள்ளையர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து தூவினர்.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த வழிப்பறியால் நிலை குலைந்த ரங்கநாதன் அலறி கூச்சலிட்டார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்.

    இவர், குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் இருந்து தங்க நகைகளை கொள்முதல் செய்து, வெவ்வேறு நகைக்கடைகளுக்கு கொண்டுசென்று கொடுப்பதோடு, அதற்கான தொகையை வசூல் செய்யும் ஏஜெண்ட்டாக வேலை செய்கிறார்.

    இந்நிலையில் ரங்கநாதன், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அன்பரசன் என்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு, நேற்று வழக்கம் போல் தன்னுடைய பணியில் ஈடுபட்டார்.

    பின்னர் பரதராமி பகுதியில் வேலைகளை முடித்துக் கொண்டு, 2 பேரும் குடியாத்தம் நோக்கி ஒரே பைக்கில் நேற்று இரவு புறப்பட்டனர்.

    அப்போது குட்லவாரிபள்ளி அருகே வந்தபோது, இவர்களை பின் தொடர்ந்து 2 பைக்குகளில் வந்த 4 பேர் மர்மகும்பல் வந்தனர். திடீரென ரங்கநாதனை வழிமறித்தனர்.

    மேலும் ரங்கநாதன், அன்பரசன் ஆகியோர் மீது கொள்ளையர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து தூவினர்.

    இதனால் 2 பேரும் நிலை தடுமாறினர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், ரங்கநாதனிடம் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த வழிப்பறியால் நிலை குலைந்த ரங்கநாதன் அலறி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடி வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து ரங்கநாதன் பரதராமி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் குடியாத்தம், எர்தாங்கல் பரதராமி, பேர்ணாம்பட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத்தீப்போல் பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரங்கநாதனை பல நாட்களாக பின்தொடர்ந்த மர்மநபர்கள்தான், இந்த செயலில் ஈடுபட்டிருக்க கூடும் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    எனவே, சம்பவம் நடந்த இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம். கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×