search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளிச்சந்தை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 35 பவுன் நகைகள்-பணம் கொள்ளை
    X

    கொள்ளை நடந்த வீடு


    வெள்ளிச்சந்தை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 35 பவுன் நகைகள்-பணம் கொள்ளை

    • மேரி ஸ்டெல்லா ராணி மண்டைக்காடு அருகே பெரிய விளையில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
    • கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ராஜாக்கமங்கலம்:

    வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி (வயது 58). இவர் பணக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மேரி ஸ்டெல்லா ராணி. இவர் மண்டைக்காடு அருகே பெரிய விளையில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் தூத்துக்குடியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    ஜான்கென்னடியும், மேரிடெல்லா ராணியும் இங்கு வசித்து வந்தனர். இவர்கள் தினமும் காலை வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று காலையில் வழக்கம்போல் இருவரும் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்குச்சென்றனர். மாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜான்கென்னடி, மேரி ஸ்டெல்லா ராணி இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்து 35 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளையடித்து இருந்தனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெள்ளிச்சந்தை போலீசார் மற்றும் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஜான்கென்னடி, மேரி ஸ்டெல்லா ராணி இருவரும் வீட்டில் இல்லாததை தெரிந்தே கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    எனவே உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பழைய கொள்ளையர்களின் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×