search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சுழி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
    X

    திருச்சுழி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது

    • கொள்ளை சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் இருளாண்டி வீரசோழன் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள வீரசோழன்-மானா சாலை ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த 27-ந் தேதி சூப்பர்வைசர் மற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தனர். ஆனால் அதில் பணம் இல்லை. இதையடுத்து அந்த கும்பல் மது பாட்டில்களை சாக்கு மூட்டைகளில் கட்டி வெளியே கொண்டு வந்தனர்.

    அப்போது அந்தப் பகுதியில் வீரசோழன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். நள்ளிரவு நேரத்தில் டாஸ்மாக் கடையில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை பார்த்த போலீசார் உடனே அவர்களை பிடிக்க முற்பட்டனர். இதைப் பார்த்த கொள்ளையர்கள் மதுபாட்டில் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் இருளாண்டி வீரசோழன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் 3 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து மது பாட்டில்களை மூட்டை கட்டும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை வைத்து கொள்ளையடிக்க முயன்றவர்கள் பற்றி துப்புதுலக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    அதில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள மறவமங்கலத்தைச் சேர்ந்த அரச பாண்டியன் மகன் குணசேகரன் (வயது 22), ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த முகமது யூசுப் (19) என்பது தெரியவந்தது.

    அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர். கைதானவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×