என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

18-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம்- எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ஜி.கே.வாசனுக்கு பா.ஜ.க. அழைப்பு
- கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் பங்கேற்க பாரதிய ஜனதா அழைப்பு அனுப்பி வருகிறது.
- தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கசப்பான சூடான வார்த்தை பரிமாற்றங்கள் நடைபெற்று வந்தன.
சென்னை:
அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதையொட்டி பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பு கூட்டம் வருகிற ஜூலை 18-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் பங்கேற்க பாரதிய ஜனதா அழைப்பு அனுப்பி வருகிறது.
அந்த வகையில் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு வரவில்லை.
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கசப்பான சூடான வார்த்தை பரிமாற்றங்கள் நடைபெற்று வந்தன.
இதன் உச்சக்கட்டமாக ஜூன் 13-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என்று கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 5-ந்தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின்போது பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று பதிலளித்தார்.
அண்மையில் பிரதமர் மோடி வலியுறுத்திய பொது சிவில் சட்டம் பற்றிய கேள்விக்கு அ.தி.மு.க. அதை எதிர்க்கிறது என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் டெல்லியில் ஜூலை 18-ந்தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பு கூட்டத்துக்கு வருமாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜனதா அழைப்பு அனுப்பி உள்ளது.
மத்திய மந்திரி பியூஸ் கோயல் இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே ஜூலை 1-ந்தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து பா.ஜ.க. தலைவர்கள் தன்னுடன் பேசிக்கொண்டு இருப்பதாக ஒரு தகவலை அவரே வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்துக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
இதன்மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரப் பூர்வமாக எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருப்பதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜனதா கட்சி கிட்டத்தட்ட கழற்றி விட்டு விட்டதாகவே தெரிகிறது.
இதேபோல் கூட்டணியில் உள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கும் பாரதிய ஜனதா கட்சி அழைப்பு அனுப்பி உள்ளது.






