search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுமக்கள் போராட்டத்தால் இரும்பு உருக்காலை தற்காலிகமாக மூடல்- தாசில்தார் அதிரடி உத்தரவு
    X

    பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    பொதுமக்கள் போராட்டத்தால் இரும்பு உருக்காலை தற்காலிகமாக மூடல்- தாசில்தார் அதிரடி உத்தரவு

    • இரும்பு உருக்காலையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்படைகின்றனர். ஆலைக்கான உரிமத்தை புதுப்பித்து தரக்கூடாது.
    • எங்கள் கோரிக்கையை மீறி அனுமதி தந்தால் அரசு வழங்கிய ஆதார், ரேசன், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைப்போம்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைய உள்ளது.

    எனவே அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 16- ந்தேதி பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதை த்தொடர்ந்து அனுப்பட்டி யில் 5 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் (பொறுப்பு) வாசுகி, உதவி பொறியாளர் செந்தில்குமார், காம நாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெ க்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் குழந்தைவேல் , தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், வக்கீல் கோபாலகிருஷ்ணன், அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் தனியார் இரும்பு உருக்காலை நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் இரும்பு உருக்காலையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்படைகின்றனர். ஆலைக்கான உரிமத்தை புதுப்பித்து தரக்கூடாது. எங்கள் கோரிக்கையை மீறி அனுமதி தந்தால் அரசு வழங்கிய ஆதார், ரேசன், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைப்பதோடு ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மாலை 4 மணிக்கு தொடங்கிய அமைதி கூட்டம் இரவு 10 மணிக்கு மேலும் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே தாலுக்கா அலுவலகம் முன்பு திரண்ட அனுப்பட்டி கிராம மக்கள் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். இதற்கிடையே பேச்சு வார்த்தை இன்று அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அடிப்படையில், இரும்பு உருக்காலை உரிமத்தை நீட்டிப்பு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், மேலும் ஆலையின் எந்திர இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து இன்று முதல் இரும்பு உருக்கு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.

    Next Story
    ×