என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இருளப்பட்டி காணியம்மன் கோவிலில் வினோத வழிபாடு: குழந்தை வரம் வேண்டி ரத்த சோறு சாப்பிட்ட பக்தர்கள்
- ஆற்றங்கரையில் அம்மனுக்கு பூஜை செய்த பின் தலையை வெட்டி பெருமாளுக்கு பூஜை செய்தனர்.
- ஏராளமான பெண்கள் பொது மக்கள் கலந்து கொண்டு ரத்த சோறு சாப்பிட்டு வினோத வழிபாடு செய்தனர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்று விழா, பல்லக்கு உற்சவம், வான வேடிக்கை, சுவாமி திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து காணியம்மன் கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேர் திருவிழா நடைபெற்று முடிந்த பின் சில நாட்களுக்கு பிறகு முனி பிடி திருவிழா நடை பெறுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முனி பிடி திருவிழாவில் இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, கோழி மேக்கனூர், தோழனூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள வனப்பகுதியை சுற்றி பெரிய காணியம்மனை மேளதாளத்துடன் இசையுடன் தூக்கி வந்து, பெருமாள் கோவில் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அம்மனுக்கு பூஜை செய்த பின் தலையை வெட்டி பெருமாளுக்கு பூஜை செய்தனர்.
பிறகு வயலில் அம்மனை வைத்து பூஜை செய்த பின்னர் சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அருள் வந்து ஆடிய பூசாரி ஆட்டின் தலையை வெட்டினார். பின்னர் அதன் ரத்தத்தை அம்மனுக்கு பூஜை செய்த சோற்றில் பிசைந்துகொடுக்க குழந்தை இல்லாத பெண்கள், தீராத நோய் உள்ள நபர்கள், முனி பிடித்த நபர்கள் அதனை உண்ணும் போது அவர்கள் வேண்டிய வேண்டுதல்கள் உடனே நடக்கும் என ஐதீகமாக நம்பப்படுகிறது.
இதில் இருளப்பட்டி, புதுப்பட்டி, அதிகாரப்பட்டி, தோழனூர், பாப்பம்பாடி, புதுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பொது மக்கள் கலந்து கொண்டு ரத்த சோறு சாப்பிட்டு வினோத வழிபாடு செய்தனர்.






