search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் வெடிவிபத்து-சீதோஷ்ண நிலை மாற்றம் எதிரொலி: சிவகாசியில் ரூ.50 கோடிக்கு பட்டாசு விற்பனை குறைந்தது
    X

    தொடர் வெடிவிபத்து-சீதோஷ்ண நிலை மாற்றம் எதிரொலி: சிவகாசியில் ரூ.50 கோடிக்கு பட்டாசு விற்பனை குறைந்தது

    • கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது.
    • நடப்பாண்டு ரூ.7 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் இருக்கும் என பட்டாசு ஆலை உரிமையளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், உப தொழில்களான காகித ஆலைகள், அச்சுத்தொழில் உள்ளிட்டவற்றில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

    நாடு முழுவதிலும் ஒன்றரை கோடி பேர் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன.

    2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளுக்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனையானது. கொரோனா கால கட்டங்களில் 2020-ல் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை முறையே முந்தைய ஆண்டுகளின் சராசரியை விட குறைவாக இருந்தது.

    தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது. அதனை முறியடித்து கடந்தாண்டு (2022) தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையானதால், ரூ.6 ஆயிரம் கோடிக்கு முதல் முறையாக வர்த்தகம் நடைபெற்றது.

    இந்நிலையில் நடப்பாண்டு ரூ.7 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் இருக்கும் என பட்டாசு ஆலை உரிமையளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். தொடர் வெடி விபத்துகள், சீதோஷ்ண நிலை காரணமாக கடைசி கட்ட உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவைகளால் கடந்த ஆண்டு விற்பனை இலக்கை ஒட்டியே இந்த ஆண்டும் பட்டாசு பட்டாசுகள் விற் றுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டு ரூ.5,950 கோடிக்கு மட்டுமே பட்டாசுகள் விற்பனையாகி கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.50 கோடிக்கு குறைவாகவே இருந்துள்ளது.

    இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் இளங்கோவன் கூறும்போது, தொடர் மழையினால் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தியில் பாதிப்பு, தொடர் பட்டாசு வெடி விபத்துகள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், அதனை தொடர்ந்து நடைபெற்ற தொடர் ஆய்வுகள், நடவடிக்கையால் கடந்த ஒரு மாத காலத்தில் பட்டாசு உற்பத்தியில் 10 சதவிகிதம் பாதிக்கப்பட்டது.

    மேலும் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்படும் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விற்பனைக்கு உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமும் விற்பனை குறைவுக்கு முக்கிய காரணமாகும். தமிழக பட்டாசு விற்பனையில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகை விற்பனையை விட நடப்பாண்டில் ரூ.50 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது என தெரிவித்தார்.

    Next Story
    ×