search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.45 கோடியில் 379 சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.45 கோடியில் 379 சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை

    • சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் 2 பேருந்து சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 2 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளில் தொடர் பயன்பாட்டின் காரணமாகவும், பருவ மழையின் காரணமாகவும் ஒரு சில சாலைகளில் பள்ளங்களும், குழிகளும் ஏற்பட்டுள்ளன. பருவமழையின் காரணமாக, மாநகராட்சியின் சார்பில் இந்தச் சாலைகளில் ஜல்லிக்கலவை, தார்க்கலவை மற்றும் குளிர் தார்க்கலவை கொண்டு பள்ளங்களும், குழிகளும் தற்காலிகமாக சீர்செய்யப்பட்டன.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பருவமழை முடிவடைந்தவுடன் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீர்செய்யப்படும் என அறிவித்திருந்தார். மேலும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது, சென்னையில் சிங்கார சென்னை 2.0, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.

    அதன் தொடர்ச்சியாக, மேயரின் ஆலோசனையின்படி, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ரூ.45.19 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள், 34 பேருந்து தார் சாலைகள், 63 உட்புற சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், 2 சிமெண்ட் கான்கிரீட் பேருந்து சாலைகள், 47 இன்டர்லாக் பேவர் பிளாக் சாலைகள் என 379 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

    மேம்படுத்தப்பட உள்ள சாலைகளின் விவரம் வருமாறு:-

    திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ரூ.19.51 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள் மேம்படுத்த 20 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

    மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் ரூ.17.35 கோடி மதிப்பீட்டில் 34 பேருந்து சாலைகளை தார் சாலைகளாக அமைக்க 13 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

    திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் 63 உட்புறச் சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 4 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

    தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் 2 பேருந்து சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 2 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

    மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் 47 சாலைகள் பேவர் பிளாக்குகளை கொண்டு அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிக்காக 4 சிப்பங்களாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

    சாலை பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் 3.1.2023 அன்று திறக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×