search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    களைகட்டும் சீசன்: விவேகானந்தர் மண்டபத்தை ஒரே மாதத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் பார்த்தனர்
    X

    படகில் செல்ல படகு துறையில் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் சுற்றுலா பயணிகளை காணலாம்.

    களைகட்டும் சீசன்: விவேகானந்தர் மண்டபத்தை ஒரே மாதத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் பார்த்தனர்

    • கன்னியாகுமரியை பொறுத்தவரை 2 சீசன் காலங்கள் உள்ளன.
    • திருவள்ளுவர் சிலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதிகளை பார்வையிடும் அவர்கள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர்.

    விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் குகன், தாமிரபரணி, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகில் பயணம் செய்ய சாதாரண கட்டணம் ரூ.75 வீதமும், சிறப்பு கட்டணம் ரூ.300 வீதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரியை பொறுத்தவரை 2 சீசன் காலங்கள் உள்ளன. கோடை விடுமுறை மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களான சபரிமலை சீசன் எனப்படும் சீசன் காலங்கள் ஆகும். கன்னியாகுமரியில் தற்போது இந்த சபரிமலை சீசனில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களால் களை கட்டியுள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகள் மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 1 லட்சத்து 90 ஆயிரத்து 200 பேர் பார்த்து ரசித்து உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். திருவள்ளுவர் சிலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

    Next Story
    ×