search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் கழுதை பால் விற்பனை விறுவிறுப்பு- சங்கு ரூ.100-க்கு விற்பனை
    X

    பால் விற்பனைக்காக கழுதைகளை அழைத்து செல்லும் பெண். 

    செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் கழுதை பால் விற்பனை விறுவிறுப்பு- சங்கு ரூ.100-க்கு விற்பனை

    • குட்டி ஈன்ற 6 மாதங்கள் வரை கழுதைகளிடம் பால் சுரக்கும்.
    • கழுதைகளை நம்பிதான் நாங்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறோம்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கணக்கப்பிள்ளை வலசை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கழுதை பால் விற்பனை பரவலாக நடைபெற்று வருகிறது.

    கழுதை பால் குடித்தால், குழந்தைகளுக்கு உடல் ரீதியில் நன்மை அதிகரிக்கும் என்று பெரியவர்கள் சொல்வதால் அதனை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதில் தாய்மார்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கழுதை பால் விற்பவர்கள் திருச்சியில் இருந்து ஒரு குழுவாக வந்து தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தனித்தனியாக பிரிந்து சென்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 10 மில்லி கொண்ட ஒரு சங்கு கழுதை பாலை ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

    மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதால் பலரும் ஆர்வமுடன் கழுதை பால் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதுகுறித்து கழுதை பால் விற்பனை செய்யும் திருச்சியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-

    நாங்கள் 3 தலைமுறைகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதற்காக ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கழுதைகளை வாங்கி வளர்த்து வருகிறோம். குட்டி ஈன்ற 6 மாதங்கள் வரை கழுதைகளிடம் பால் சுரக்கும். கழுதை பால் குடிப்பதால் குழந்தைகளுக்கு சளி, தோஷ, மாந்திரீக பிரச்சனைகள் நீங்கும் என்று கூறுவார்கள்.

    இதனை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பெரியவர்கள் கழுதை பால் குடிப்பதால் வாய் புண், வயிற்றுப் புண் குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும். 12 மணி நேரம் வரை கழுதை பால் கெடாமல் இருக்கும். எங்களுக்கு நாள்தோறும் இந்த கழுதைகள் மூலம் ரூ.1000 முதல் ரூ.1500 வரை வருமானம் கிடைக்கிறது. இந்த கழுதைகளை நம்பிதான் நாங்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறோம்.

    இது ஒரு சீசன் மற்றும் நாடோடி தொழிலாகும். இந்த வேலை இல்லாத சமயத்தில் கிடைக்கும் கூலி வேலைக்கு செல்வோம். இந்த கழுதைகளை குல தெய்வங்களாக நாங்கள் கருதுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×