search icon
என் மலர்tooltip icon

  தமிழ்நாடு

  மகன் வெற்றியின் உடல் தகனம்: நான் மனம் கலங்கமாட்டேன் என சைதை துரைசாமி உருக்கமான பேச்சு
  X

  மகன் வெற்றியின் உடல் தகனம்: நான் மனம் கலங்கமாட்டேன் என சைதை துரைசாமி உருக்கமான பேச்சு

  • எனக்கு ஒரு மகன் போனாலும், பக்கபலமாக இங்கு என்னுடைய மகன்கள் இருக்கிறார்கள், மகள்கள் இருக்கிறார்கள்.
  • நான் இன்னும் உறுதியோடு, வலிமையோடு சேவையை செய்து என்னுடைய வாழ்க்கை அமைத்துக்கொள்வேன்.

  பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி (வயது 45). இவர் இமாசல பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றார். கடந்த 4-ந்தேதி அவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் கார் டிரைவர் பலியானார். உதவியாளர் கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். வெற்றி மாயமானார்.

  அவரது உடல் 8 நாட்களுக்கு பின்னர் சட்லஜ் நதியில் பாறைகளுக்கு அடியில் இருந்து நேற்று முன்தினம் உள்ளூர் நீச்சல் வீரர்கள் மூலம் மீட்கப்பட்டது.

  இதையடுத்து அவரது உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நேற்று மாலை 4 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு அவரது உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டது. கிழக்கு தாம்பரம் ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

  அதன் பின்னர் உடல் நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள சைதை துரைசாமியின் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறி சென்றனர்.

  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அஞ்சலி செலுத்த வந்தார். ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக அவரால் உள்ளே வர முடியவில்லை. பின்னர், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் சார்பில் வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

  நேற்று இரவு 8.20 மணிக்கு மேல் சென்னை நந்தனத்தில் உள்ள சைதை துரைசாமியின் இல்லத்தில் இருந்து வெற்றியின் உடல் தகனம் செய்வதற்காக தியாகராயநகரில் உள்ள கண்ணாம்மாபேட்டை மயான பூமிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, வெற்றியின் உடலுக்கு சைதை துரைசாமியின் பேரன் சித்தார்த் கொள்ளி வைத்தார்.

  தகன சடங்குகள் நிறைவடைந்த நிலையில் சைதை துரைசாமி மற்றும் அவரின் குடும்பத்தினர் வெளியே வந்தனர். மயானத்திற்கு முன்பு திரண்டு இருந்த ஆதரவாளர்கள், அ.தி.மு.கவினர் முன்னிலையில், சைதை துரைசாமி பேசியதாவது:-

  வெற்றி நம்மை விட்டு பிரிந்தது என்பது விதி. போகவே வேண்டாம் என்று நான் சொன்னேன். இந்த முறை இது கடைசி என்று சொல்லி சென்றான். அது அவனுக்கு கடைசி பயணமாக இருக்கும் என்று நான் ஒரு காலமும் நினைக்கவில்லை.

  இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அரசின் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிகளில் பணியாற்ற வாய்ப்பை பெற்ற மகன்களும், மகள்களும் இங்கு வந்துள்ளார்கள்.

  எனக்கு ஒரு மகன் போனாலும், பக்கபலமாக இங்கு என்னுடைய மகன்கள் இருக்கிறார்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்ற மன வலிமையுடன் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  நான் மனம் கலங்கமாட்டேன். காரணம் இத்தனை மகன்களை நான் பெற்றுள்ளேன். அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். ஆகவே, நான் இன்னும் உறுதியோடு, வலிமையோடு சேவையை செய்து என்னுடைய வாழ்க்கை அமைத்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்து, என் மகனின் இறுதி நாளில் நான் சூளுரை கொண்டு அந்த பாதையில் நான் பயணிக்கிறேன்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  Next Story
  ×