search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு முழுவதும் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி: சென்னை ஐகோர்ட்
    X

    தமிழ்நாடு முழுவதும் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி: சென்னை ஐகோர்ட்

    • ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தினால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
    • ஊர்வலத்தில் சீருடை இல்லாத யாரையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுமதிக்கக்கூடாது.

    சென்னை:

    விஜயதசமி மற்றும் தேசிய தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 22 மற்றும் 29-ந் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு அந்தந்த மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் மனு கொடுத்தனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா, ஜி.கார்த்திகேயன், வக்கீல் ரபுமனோகர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

    போலீஸ் தரப்பு அட்வகேட் ஜெனரல் செய்த வாதத்தில், 'அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்கும் ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை. தேவாலயம், மசூதி, திராவிடர் கழக அலுவலகம் இருக்கும் வழியாக ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டுள்ளனர். மேலும், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை இணைத்து அகண்ட பாரதம் கட்டமைப்போம் என்று வரைபடங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ளனர்'' என்றார்.

    அதற்கு நீதிபதி, "அகண்ட பாரதம் என்று அவர்கள் கூறுவதால் அரசுக்கு என்ன பிரச்சினை? அதை அவர்கள் விரும்புகின்றனர்" என்று கருத்து தெரிவித்தார்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல், "இது மிகவும் தீவிரமானது. இதுபோன்ற கோரிக்கை முன்வைக்கும் இவர்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். இமாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கோருகிறது. இமாச்சல பிரதேசத்தை தன் நாட்டு வரைப்படத்துடன் இணைத்து, இது எங்களுடையது என்கிறது. அதுபோலத்தான் இதுவும்'' என்றார்.

    தலைமை குற்றவியல் அரசு வக்கீல், 'ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தினால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது' என்றார்.

    அதற்கு நீதிபதி, 'சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசின் கடமை. அணி வகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் கேட்கப்பட்ட விவரங்களை போல பிற அமைப்புகளிடம் கேட்கப்படுமா?' என்று கேள்வி எழுப்பினார்.

    பின்னர், நீதிபதி பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிற 22 மற்றும் 29-ந் தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கும் போலீசார் கூறும் காரணங்களை ஏற்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை நேரில் அழைத்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை செய்து, அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நிலவரப்படி நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

    இந்த ஊர்வலத்தில் சீருடை இல்லாத யாரையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுமதிக்கக்கூடாது. போலீசார் விதிக்கும் நிபந்தனைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். அமைதியான முறையில் ஊர்வலம் நடத்த வேண்டும். இதற்கு தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். 22-ந் தேதி நடக்கும் ஊர்வலத்தின் வழித்தடத்தை 20-ந் தேதிக்குள்ளும், 29-ந் தேதி ஊர்வல வழிதடத்தை 24-ந் தேதிக்குள்ளும் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    Next Story
    ×