search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை நீடிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு
    X

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை நீடிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு

    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 50 அடியை கடந்த நிலையில் இன்று 52.20 அடியாக உயர்ந்துள்ளது.
    • ராமநதி நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 64 அடியாக உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்றும் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் 2 அணைகளுக்கும் வினாடிக்கு 1,895 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1,354 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பாபநாசத்தில் 22 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 20 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 20 அடிக்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 95.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 107.15 அடி நீர் இருப்பு உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 50 அடியை கடந்த நிலையில் இன்று 52.20 அடியாக உயர்ந்துள்ளது. கொடு முடியாறு அணை நீர்மட்டம் நேற்று 28.75 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 34 அடியை எட்டியுள்ளது.

    அதே நேரத்தில் 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் வெறும் 6.75 அடியாகவே உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து எஸ்டேட்டுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 41 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஊத்து எஸ்டேட்டில் 37 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 33 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 25 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குண்டாறு அணை ஒரு வாரமாக நிரம்பி வழிகிறது.

    அடவிநயினார் நீர்மட்டம் நேற்று 113.75 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி அதிகரித்து 117 அடியை எட்டியுள்ளது.

    ராமநதி நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 64 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணையில் மட்டும் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதியில் 45 அடியை எட்டியுள்ளது. கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

    Next Story
    ×