search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜனாதிபதி வருகை எதிரொலி: முதுமலை புலிகள் காப்பகம் 6 நாட்கள் மூடல்
    X

    ஜனாதிபதி வருகை எதிரொலி: முதுமலை புலிகள் காப்பகம் 6 நாட்கள் மூடல்

    • பிரதமர் நரேந்திர மோடியும் பாகன் தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டி சென்றிருந்தார்.
    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு முகாம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில், தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மியை பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்தனர்.

    பாகன் தம்பதியினர் மற்றும் யானை குட்டிகள் இடையேயான பாச உறவை மையமாக வைத்து தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் தயாரானது.

    இந்த ஆவணப்படம் அண்மையில் ஆஸ்கர் விருதினையும் பெற்றது. இதையடுத்து அந்த படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளி மற்றும் யானை குட்டிகள் உலகளவில் புகழ் பெற்றன. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடியும் பாகன் தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டி சென்றிருந்தார்.

    இந்த நிலையில் பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 5-ந் தேதி முதுமலைக்கு வருகிறார். டெல்லியில் இருந்து மைசூருக்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மசினகுடி வந்து, அங்கிருந்து கார் மூலம் முதுமலைக்கு வருகிறார்.

    அங்கு பாகன் தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டுவதோடு, அங்குள்ள பழங்குடி மக்கள் மற்றும் பாகன்களையும் சந்தித்து பேச உள்ளார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு முகாம் தற்காலிகமாக மூடப்படுகிறது. இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை 6 நாட்கள் முகாம் மூடப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தெப்பக்காடு யானைகள் முகாம் இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

    யானைகள் முகாமுக்குள் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மற்ற இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து கொள்ளலாம் என்றனர்.

    Next Story
    ×