search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பண்டிகை முன்பதிவு டிக்கெட்- 15 நிமிடங்களில் விற்று தீர்ந்தன
    X

    பொங்கல் பண்டிகை முன்பதிவு டிக்கெட்- 15 நிமிடங்களில் விற்று தீர்ந்தன

    • சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பின.
    • கன்னியாகுமரி, நெல்லை, குருவாயூர், முத்துநகர் எக்ஸ்பிரசில் 2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன.

    சென்னை:

    தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து 15-ந் தேதி மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகியவை கிராமப்புறங்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடவே விரும்புவார்கள். அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் செய்யும், வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர்.

    ஜனவரி 10-ந் தேதிக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. ஜனவரி 11-ந் தேதிக்கு நேற்று முன்பதிவு செய்தனர். பொதுவாக பொங்கலுக்கு 2 நாட்கள் முன்பு தான் சொந்த ஊர் பயணம் மேற்கொள்வார்கள். பெரும்பாலானவர்கள் 12-ந் தேதியும் கடைசி நேர பயணத்தை தொடங்குவோர் 13-ந் தேதியும் புறப்பட்டு செல்வார்கள்.

    அந்த வகையில் ஜனவரி 12-ந் தேதி ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான முன்பதிவை இன்று செய்தனர். 120 நாட்களுக்கு முன்பு ரெயிலில் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்காமல் குடும்பத்துடன் பயணம் செய்ய முன்பதிவு செய்வது பாதுகாப்பானது எனக் கருதி முன்பதிவு செய்ய திட்டமிட்டனர்.

    காலை 8 மணிக்கு முன்பதிவுக்கான நேரடி புக்கிங் கவுண்டர் திறக்கப்பட்டது. ஆனால் கவுண்டர்களில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. அனைவரும் வீடுகளில் இருந்தே ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்தனர்.

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக முன்பதிவு செய்வதற்கு காலை 6 மணிக்கே தயாராக இருந்தனர். 8 மணிக்கு இணையதளம் திறக்கப்பட்டவுடன் ஆர்வத்துடன் முன்பதிவு செய்தனர். சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அம்பத்தூர், அடையார், பெரம்பூர், மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்பதிவு கவுண்டர்களில் நின்ற பயணிகள் சிலருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைத்தது.

    முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் முக்கிய ரெயில்களுக்கான இடங்கள் நிரம்பி விட்டன. 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தன.

    இணையதளம் வழியாக பொதுமக்கள், ரெயில்வே ஏஜென்சிகள் முன்பதிவு செய்வதில் தீவிரமாக இருந்தனர். முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் எல்லா இடங்களும் நிரம்பியது. குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பின.

    முதல், 2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை வசதி இடங்கள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. முன்பதிவு மையங்களில் வரிசையில் காத்து நின்ற சிலருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைத்தது. பலர் ஆர்.ஏ.சி., காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற்று சென்றனர்.

    கன்னியாகுமரி, நெல்லை, திருச்செந்தூர் முத்துநகர், மதுரை பாண்டியன், திருச்சி மலைக்கோட்டை, பொதிகை, அனந்தபுரி ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் 50-ஐ தொட்டன.

    குருவாயூர் எக்ஸ்பிரசில் மட்டும் 2-ம் வகுப்பு படுக்கை 200-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. நாகர்கோவில் சிறப்பு ரெயிலிலும் படுக்கை வசதி காலியாக இருக்கின்றன.

    கன்னியாகுமரி, நெல்லை, குருவாயூர், முத்துநகர் எக்ஸ்பிரசில் 2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன. கொல்லம் எக்ஸ்பிரசில் ரெயிலில் 2-ம் வகுப்பு படுக்கை நிரம்பி விட்டன. ஏ.சி. படுக்கை வசதி மட்டும் உள்ளன.

    இதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைந்த அளவில் இடங்கள் உள்ளன. பகல் நேர ரெயில்களில் இடங்கள் காலியாக இருக்கின்றன.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே ரெயில்களில் அனைத்து வகுப்புகளும் நிரம்பி வருகின்றன. ஒரு சில சிறப்பு ரெயில்களில் இடங்கள் காலியாக உள்ளன.

    Next Story
    ×